நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப அணியினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விதிமுறைகள் வகுத்து கொடுக்கப்பட்டன. இயக்க தலைமை வெளியிடும் தகவல்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்.

தேவையற்ற, சர்ச்சைக்குரிய பதிவுகள் போடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்பம் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் தொடர்பு கொள்ள 30 ஆயிரம் பேரை தேர்வு செய்து நியமிக்க முடிவு செய்துள்ளனர். நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்குவதற்கு முன்பு ரசிகர் மன்றத்தை இப்படித்தான் கட்டமைத்ததை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். நடிகர் விஜய்யும் துணை அமைப்புகளை கட்டமைத்து வருவதை பார்க்கும்போது அடுத்தக்கட்டத்தை நோக்கி வேகமாக நகருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

தொகுதி வாரியாக சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கியது, ஏழை மாணவ, மாணவிகளுக்கு மாலைநேர இலவச டியூஷன் வகுப்புகள் அடித்தட்டு மக்களையும் கவர்ந்துள்ளது. விஜய்யின் வேகமான நகர்வுகள் மற்றும் செயல்பாடுகளை பார்க்கும்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடாவிட்டாலும் ஒரு சில தொகுதிகளில் போட்டியிட்டு பலத்தை சோதித்து பார்க்க முடிவு செய்துள்ளதாக மன்ற நிர்வாகி ஒருவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal