‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது. பிறகு நிலவுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து ‘விக்ரம் லேண்டர்’ கருவி பிரிக்கப்பட்டது. இந்த ‘லேண்டர்’, இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது.
இறுதிக்கட்ட செயல்பாடுகள் சவால் நிறைந்தவை என்பதால், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ‘சந்திரயான்-3’ குழுவினர், விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் ஆகியோர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஏற்கனவே ‘சந்திரயான்-2’ விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டர்’ கருவி, தற்போதைய ‘லேண்டர்’ கருவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது, சாதகமான சூழ்நிலையாக கருதப்படுகிறது. இரண்டும் தங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளன. இதனால், ‘லேண்டர்’ நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்று நிலவுக்கு மேலே 30 கி.மீ. உயரத்தில் ‘லேண்டர்’ இருக்கும்போது, அதை நிலவில் தரையிறக்குவதற்கான முயற்சிகள் தொடங்கும். அப்போது, நிலவின் தரையை நோக்கி வினாடிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் ‘லேண்டர்’ செல்லும்.
இந்த சமயத்தில் நிலவின் ஈர்ப்புவிசையும் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், ‘லேண்டரின்’ வேகத்தை கண்காணித்து கட்டுப்படுத்துவதில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்த இருக்கின்றனர். நிலவை நெருங்கும் ‘லேண்டரின்’ கடைசி ஏழு நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், கடைசிக்கட்ட நிகழ்வுகள் நொடிக்கு நொடி கண்காணிக்கப்படுகின்றன. இந்த ‘கிளைமாக்ஸ்’ நிகழ்வுக்கு திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் தயார் என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் லேண்டர் கருவி தரையிறங்கும் காட்சியை காண உலகமே ஆவலோடு காத்திருக்கிறது. மாலை 5.20 மணி முதல் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.