மதுரையில் நடந்த எழுச்சி மாநாடு அ.தி.மு.க.வினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியும் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார். மாநாட்டை சிறப்பாக நடத்த உதவிய சீனியர் மாஜிக்களை எடப்பாடியார் பாராட்டினார். அதோடு, மேடையிலேயே தகவல் தொழில் நுட்ப அணியின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்தியனையும் மேடையிலேயே எடப்பாடியார் பாராட்டினார்.

மதுரை அ.தி.மு.க. மாநாடு பற்றி உளவுத்துறை வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சார், உளவுத்துறையின் ரிப்போர்ட் படி மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகாமானோர் கலந்துகொண்டனர். ஆனால், மாநாட்டு மேடை மற்றும் பந்தலுக்கு வரமுடியாமல் இருந்தவர்கள் மட்டும் சில லட்சம் பேர். பாதிவழியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, மாநாடு முடிந்தவுடன் சென்றவர்கள் ஒரு லட்சத்தை தாண்டும். ஆக, மொத்தத்தில் எடப்பாடியாரின் எழுச்சி மாநாடு வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்’’ என்றனர்.

ஆனால், ஊடகங்கள்தான் இத்தனை லட்சம் பேர் கலந்துகொண்டார்கள் என்று, அவர்கள் எந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ, அதனை வெளிப்படுத்தினார்கள். மாநாட்டிற்கான வேலைகளில் முக்கிய பங்காற்றியவர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மேடையிலேயே பாராட்டு தெரிவித்தார்.

அந்த வகையில் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா என சிலரது பெயரை மேடையிலேயே வாசித்தார். முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பெயரையும் வாசித்தார். ஆனால், உணவுத்துறை அமைச்சர் மீது, மாநாட்டிற்கு வந்தவர்கள் சிலர் விமர்சனம் செய்தனர். காரணம், உணவு தயாரிப்பு முறையில் சில குளறுபடிகள் நடந்ததாக கூறுகின்றனர்.

அடுத்ததாக, மதுரை மண்டல ஐ.டி.விங் செயலாளர் ராஜ் சத்தியன் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக மேடையிலேயே அவரது பெயரை உச்சரித்தார் எடப்பாடி பழனிசாமி. மிகவும் குறுகிய காலகட்டத்தில், மதுரை தகவல் தொழில் நுட்ப அணியின் பங்கு மிகவும் அசாத்தியமானது என்கின்றனர் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளே! அதனால்தான் எடப்பாடி பழனிசாமியே மனமுவந்து ராஜ் சத்தியனை பாராட்டியிருக்கிறார்’’ என்றனர்.

ஆக மொத்தத்தில், எடப்பாடி பழனிசாமியின் குட் புக்கில் இடம் பிடித்திருக்கிறார் மதுரை மண்டல ஐ.டி.விங் செயலாளரும், வி.வி.ராஜன் செல்லப்பாவின் மகனுமான ராஜ் சத்தியன்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal