பா.ஜ.க.வை வீழ்த்த உருவாகிய ‘இந்தியா’ கூட்டணி, கூட்டணிக் கட்சிகளாலேயே உடையத் தொடங்கியிருக்கிது.

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். அடுத்த கட்டமாக இந்த மாத இறுதியில் மும்பையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.

இந்தியா கூட்டணியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் உள்ளது. இந்த கட்சி டெல்லியில் தற்போது ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லியில் தங்களது கட்சிக்கு வலுசேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டனர் என்று செய்தி தொடர்பாளர் அல்கா லம்பா தெரிவித்தார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. டெல்லி காங்கிரசை புத்துயிர் பெற செய்வதே எங்கள் முதல் பணி. டெல்லியை செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றியுள்ளோம், டெல்லி மக்களுக்கான எங்கள் போராட்டம் இன்னும் தொடர்கிறது” என்றார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்த வேண்டும் என்பது இந்தியா கூட்டணியின் முக்கிய வியூகமாக உள்ளது.

குறிப்பாக, எந்த ஒரு தொகுதியிலும் வலுவாக உள்ள கட்சி வேட்பாளரை நிறுத்த பிற கட்சியினர் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டெல்லியில் ஆம் ஆத்மி வலுவாக, ஆளும் கட்சியாக உள்ள நிலையில், அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், “எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் ஏற்கனவே முடிவு செய்திருந்தால், அடுத்த ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. எங்கள் தலைமை அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வோமா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என்றார்.

ஆம் ஆத்மி மூத்த தலைவரும் மந்திரியுமான சவுரப் ரத்வாஜ் கூறும்போது, “இந்த விவகாரத்தில் கட்சியின் மத்திய தலைமை முடிவு எடுக்கும். எங்கள் தேர்தல் விவகாரக் குழுவும் இந்தியா கூட்டணி கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன” என்றார். ஏற்கனவே மத்திய அரசின் டெல்லி சேவைகள் திருத்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே சமீப காலமாக மோதல் ஏற்பட்டது.

இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான நிபந்தனையாக, அவசரச் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிடம் ஆம் ஆத்மி கோரியது. பின்னர், பாராளுமன்றத்தில் சேவைகள் மசோதா மீது காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது. ஆனால் மசோதா நிறைவேற்றப்படுவதைத் தடுக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தேர்தல் குறித்த அதிரடி முடிவு இந்தியா கூட்டணி இடையே திடீர் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி தீபக் பபாரியா கூறுகையில், “அல்கா லம்பா ஒரு செய்தித் தொடர்பாளர், ஆனால் இதுபோன்ற முக்கியமான விஷயங்களைப் பேசுவதற்கு அவர் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் அல்ல. காங்கிரஸ் கூட்டத்தில் அவர் கூறுவது போன்ற விவாதங்கள் எதுவும் இல்லை என்று நான் ஒரு பொறுப்பாளராகக் கூறினேன். அல்கா லம்பாவின் அறிக்கையை நான் மறுக்கிறேன். ஆம் ஆத்மி கட்சியில் முதிர்ச்சியடையாதவர்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். ஊடக அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் இவ்வளவு பெரிய முடிவை எடுக்க விரும்பினால், கடவுளால் கூட அவர்களை காப்பாற்ற முடியாது,” என்று கூறினார்.

ஏற்கனவே, மும்பையில் சரத்பவார் கட்சியில் அக்கட்சியின் தலைவர் சுப்ரியா சுலேவுக்கும், காங்கிரஸ் தலைமைக்கு உரசல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal