‘அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. எனது பிறந்த நாளன்று யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம்’ என சசிகலா கடிதம் எழுதியிருக்கிறார்.

அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக உள்ளது. இந்தநிலையில் மீண்டும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் சசிகலா தீவிரமாக களம் இறங்கியுள்ளார். இந்தநிலையில் தொண்டர்களுக்கு சசிகலா எழுதியுள்ள கடிதத்தில்…

‘‘புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான, புரட்சித்தலைவியின் வழிவந்த சிங்கங்களான, என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்துகொண்டேன். உங்களுடைய அன்புக்கு நான் என்றைக்குமே அடிமை. உங்களுடைய அன்பும் ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுவரை நான் மேற்கொண்ட புரட்சிப்பயணங்களின் வாயிலாக எண்ணற்ற கழகத்தொண்டர்களை நேரில் சந்தித்தபோது, நீங்கள் என்னிடம் காட்டிய ஈடு இணையில்லா அன்பையும், எனக்களித்த ஏகோபித்த ஆதரவையும் என்னால் மறக்க முடியாது. அதே போன்று தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும், நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து உங்களையெல்லாம் சந்திக்க இருக்கிறேன். உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன்.

ஆகையால், தற்சமயம் எனது பிறந்தநாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் அருகில் இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளே, நீங்கள் எனக்கு அளிக்கின்ற, சிறந்த பிறந்தநாள் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன்.

அதுவே, மறைந்த நம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் எனக்கு அளிக்கும் மிகப்பெரிய ஆசிர்வாதமாகவும், சிறந்த பிறந்தநாள் பரிசாகவும் கருதுகிறேன். என் உயிரினும் மேலான கழகத் தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் வர இருக்கிறது.

பொறுமையோடு இருங்கள். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என பேரறிஞர் அண்ணா அவர்களின் வாக்கிற்கிணங்க, “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்று புரட்சித்தலைவர் அவர்கள் பாடிய வைர வரிகளைப் பின்பற்றி, “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தாரக மந்திரத்தை, ஒவ்வொருவரும் கடைபிடித்து, “அமைதி, வளம், வளர்ச்சி” என்று நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சுட்டிக் காட்டிய வெற்றி இலக்கை, எட்டிப்பிடிப்போம்.

இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களை, உண்மையானவர்களை, உறுதியானவர்களை, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்துதான் இன்றைக்கும் காத்து கொண்டு இருக்கிறது. ஆகவே, மண்ணை நேசிப்போம். மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்’’ என சசிகலா தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal