வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாடு மிக பிரம்மாண்டமாக நடக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், செல்லூர்ராஜு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். மேலும், இம்மாநாட்டை பிரம்மாண்டாக நடத்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் பிரம்மாண்ட பலூன் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான் அ.தி.மு.க. மாநாட்டை பட்டி தொட்டியெல்லாம் வலைதளங்கள் மூலம் பரப்புரை செய்ய மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்தியன் தலைமையிலான டீம் அதிதீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.

‘‘சார், திருச்சியில் நடந்த வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘அனைவரும் வாட்ஸப், ஃபேஸ்புக் கணக்குகளை உடனடியாக தொடங்குங்கள். இன்றைக்கு வலைதளங்கள்தான் உடனடியாக மக்களை சென்றடைகின்றன’ என மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க.வினரும் வலைதளங்களில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினருக்கு எதிராக சில கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில்தான் மதுரை ஐ.டி. விங்கின் செயலாளர் ராஜ் சத்தியன் தலைமையிலான டீம், அ.தி.மு.க. மதுரை மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொள்ளும் வகையில் எடப்பாடியாரின் சாதனைகளை விளக்கி வலைதளங்களில் அசுர வேகத்தில் பரப்பி வருகின்றனர்.

ஏற்கனவே, அதிமுகவின் மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் கமலுக்கு எதிராக பதிவிட்டுள்ள ட்வீட்டில், ‘‘கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் பல்வேறு காட்சிகள் இருந்ததாலும், அதனை இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்த்தாலுமே படம் அன்றைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அம்மா அவர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டார் என கமல்ஹாசன் சித்தரிக்கப் பார்ப்பது கபட நாடகம் மற்றும் கடைந்தெடுத்த கோழைத்தனம். இஸ்லாமியர்களுக்காக என்றும் அதிமுக துணை நிற்கும் என்பதை ஈரோடு வாழ் இஸ்லாமியர்களுக்கு நினைவூட்டிய ரெட்ஜெயன்ட் கம்பனி நடிகராகவும், -திமுகவின் தரம் தாழ்ந்த பேச்சாளராகவும் மாறிவிட்ட முன்னாள் மய்ய தலைவருக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார். இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தற்போது, மதுரை மாநாட்டிற்கு அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் ‘வலைதள’ பிரச்சாரம் பெரிய அளவில் கைகொடுத்து வருகிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்! இது போல துடிப்புள்ள இளைஞர்களை எடப்பாடி பழனிசாமி ஊக்குவித்து வருவதும் குறிப்பிடத் தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal