அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை கைது செய்யவில்லை என்று அமலாக்கத்துறை சமீபத்தில் கூறிய நிலையில், அவரது வழக்கறிஞர் விரைவில் அசோக்குமார் நீதிமன்றத்தில் சரணடைவார் என்ற தகவலை தெரிவித்திருக்கிறார்.
சட்டவிரோத பணிபரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யபபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த மோசடியில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கும் தொடர்பிருப்பதாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.
அமலாக்கத் துறை 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் தனக்கு இதய நோய் பாதிப்பு இருப்பதால் மேலும் 4 வாரம் கால அவகாசம் வேண்டும் என அசோக்குமார் ஜூலை 24 ஆம் தேதி கோரியுள்ளார்.
இந்த நிலையில் நேரில் ஆஜராகி அவர் விளக்கம் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை தீவிரம் காட்டி வந்த நிலையில்தான் கால அவகாசத்தை அசோக்குமார் கோரியிருந்தார். இந்த கால அவகாசம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைகிறது. அதாவது ஆகஸ்ட் 23 அல்லது 24 ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் அவர் கடந்த 13 ஆம் தேதி கேரளாவில் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாத நிலையில் விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டியிருந்ததாகவும் அதை வைத்துதான் கொச்சி விமான நிலையத்திற்கு வந்த அசோக்குமாரை கேரள போலீஸார் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும் அசோக்குமாரை சென்னைக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்து வந்ததாகவும் அவர் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இந்த தகவலை அமலாக்கத் துறை மறுத்திருந்தது. அசோக்குமாரை அமலாக்கத் துறை கைது செய்யவில்லை என கூறியிருந்தது.
இந்த நிலையில் அசோக்குமார் விரைவில் சரணடைவார் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அசோக்குமார் வழக்கறிஞர் கூறுகையில், எந்த வழக்கிற்காக சோதனை நடந்தது என்பதை குற்றப்பத்திரிகையில் பார்த்த பின்னர் சரண்டர் அடைவார் என்றார். அசோக்குமாரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்திய பிறகு, அவர் அளிக்கும் வாக்குமூலங்கள் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் ஒட்டுமொத்த குடும்பமும் அமலாக்கறையின் விசாரணை வளையத்திற்கும் விரைவில் சிக்கும் என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்!