இந்திய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாகி பிறகு பா.ஜ.க.வில் இணைந்து மத்திய அமைச்சராக வளர்ந்தவர் ஸ்மிருதி இரானி (47). ஸ்மிருதி ஜுபின் இரானி எனும் தொழிலதிபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஜூபின் ஏற்கெனவே மோனா எனும் பெண்ணை திருமணம் செய்து பிறகு அவரை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதி இரானி தொலைக்காட்சி பேட்டிகளிலும், கலந்துரையாடல்களிலும், விமர்சனங்களுக்கும் மற்றும் கேள்விகளுக்கும் காட்டமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிப்பதில் வல்லவர். இவர் பேட்டிகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 2018ல் ஒரு தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சியில் பிரபல நடிகர் கமலஹாசனுடன் பங்கு பெற்று பலரும் பாராட்டும் வகையில் தனது கருத்துக்களை ஸ்மிருதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் “என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்” எனும் ஒரு கேள்வி-பதில் பகுதியில் அவரிடம் பலர் சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டனர். அப்போது ஒரு பயனர் ஸ்மிருதியிடம், “நீங்கள் உங்கள் பால்ய பருவ தோழியின் கணவரை திருமணம் செய்து கொண்டீர்கள் அல்லவா?” என கேட்டார். இதற்கு காட்டமாக பதிலளித்து அவர் கூறியதாவது: “இது என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. முதலில் மோனா எனக்கு பால்ய பருவ தோழியாக முடியாது. ஏனென்றால் அவர் என்னை விட 13 வயது மூத்தவர். அது மட்டுமல்ல. அவர் அரசியல்வாதி அல்ல; ஒரு குடும்ப பெண்மணி. என்னோடு விவாதம் செய்து என்னை அவமானப்படுத்த நினைத்தால் அதற்கு அவரை இழுக்காதீர்கள். அவருக்கு உரிய மரியாதையை தந்தாக வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொலைக்காட்சி தொடரில் நடித்த காலங்களை இழந்ததாக நினைக்கிறீர்களா என கேட்கப்பட்டதற்கு “நான் கனவுலகில் வாழ்வதில்லை. தொலைக்காட்சி தொடரில் நடித்த காலங்கள் சிறப்பாக இருந்தது. வாழ்க்கையில் எதையும் நடக்காது என சொல்ல முடியாது என வாழ்க்கை நமக்கு கற்பிக்கிறது” என ஸ்மிருதி இரானி பதிலளித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal