அமைச்சர் செய்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கலாம் என உத்தரவிட்ட நிலையில், செந்தில் பாலாஜியிடம் நடத்தப்படும் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்த மாதிரியான கேள்விகளை கேட்டனர் என்பது பற்றிய விசாரணையில் இறங்கினோம்.
‘‘போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.
இதன் அடிப்படையில் கைதான அவரிடம், அது தொடர்பாகவே கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறதாம். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படுவது தொடர்பாகவே அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறதாம். ஆனால் 50 சதவிகிதம் மட்டுமே இதில் இருந்து கேள்வி கேட்கப்படுகிறதாம். மற்ற 50 சதவிகிதம் பெரும்பாலும் தற்போதைய திமுக ஆட்சி, தற்போதைய ஆட்சியில் அவர் வாங்கிய சொத்துக்கள், அவர் செய்த தேர்தல் செலவுகள் பற்றித்தான் விசாரணை நடத்தப்படுகிறதாம்.
- இப்போது ஆட்சியில் நீங்கள் வாங்கிய சொத்துக்கள் எப்படி வந்தன.
2 கடந்த தேர்தலுக்கு செலவு செய்த தொகைகள் எங்கே இருந்து வந்தன.
- இந்த ஆட்சியில் உங்கள் டெண்டர் மூலம் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?
- உங்களது தம்பி அசோக்கின் மனைவி பலகோடி செலவில் பிரம்மாண்டமாக வீடு கட்டுகிறாரே, அதற்கு எங்கிருந்து பணம் வந்தது.
- டாஸ்மாக் பார்களை முறைப்படி ஏலம் விடுக்காமலேயே தமிழகம் முழுவதும் நடந்திருக்கிறது. ஆனால், பார் உரிமையாளர்களிடம் பணம் வாங்கியிருக்கிறீர்கள் அந்தப் பணம் எங்கே? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனராம். திமுக மேலிடத்தை குறி வைக்கும் விதமாக இந்த கேள்விகளை அமலாக்கத்துறை மீண்டும் மீண்டும் எழுப்பி வருகிறதாம். ஆனால் இதற்கு செந்தில் பாலாஜி பெரிதாக பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தினமும் 50 கேள்விகள் குறைந்தபட்சம் கேட்கப்படும். இதில் செந்தில் பாலாஜி சரியாக பதில் அளிக்காத நிலையில் அவரின் கஸ்டடியை நீட்டிக்க கோரி அமலாக்கத்துறை கோரிக்கை வைக்கும் வாய்ப்புகள் உள்ளன’’ என்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘தெரியாது… ஞாபகம் இல்லை’ என்று பதிலளித்தாலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் காட்டும் ஆவணங்கள் அவரை அதிர்ச்சியடைய வைக்கிறதாம்.