சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு காவலில் எடுத்தனர். கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருந்த போதிலும் நெஞ்சுவலி காரணமாக அவரை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை. செந்தில் பாலாஜி தரப்பில் கோர்ட்டில் போடப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் இதற்கு இடையூறாக இருந்தன. இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 60 நாட்களாக ஆகபோகும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் காவலில் எடுக்க அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இருந்து அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்நாளாக நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரம் மட்டும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதன்பின்னர் செந்தில் பாலாஜி நன்றாக ஓய்வெடுத்தார். இதை தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் இருந்து செந்தில் பாலாஜியிடம் முழுமையான விசாரணை தொடங்கியது. இதன் மூலம் 2-வது நாளில் இருந்தே செந்தில் பாலாஜியிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடந்த 3-ந்தேதி அன்று செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நபர்கள் வீடுகளில் அமலாக்கதுறை நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. வேடச்சந்தூர் தி.மு.க. பிரமுகரும் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவருமான வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டன. அவரது வீட்டில் இருந்த ஆவணங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது தனது உறவுக்கார பெண்ணான சாந்தி என்பவர் மூலமாக அவரது கார் டிரைவரிடம் சுமார் 60 சொத்து ஆவணங்கள் கொடுத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஆவணங்கள் அனைத்தையும் கைப்பற்றி இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றைய விசாரணையின் போது 60 நில ஆவணங்களையும் காட்டி அதிரடியாக விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சொத்துக்கள் அனைத்தும் பல்வேறு பெயர்களில் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அது தொடர்பாகவும், அவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளனர். இது போன்ற பல்வேறு கேள்விகளால் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் திணறடித்துள்ளனர். செந்தில் பாலாஜியை அனைத்து கேள்விகளும் அசரவைத்துள்ளன.
இன்று 3-வது நாளாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 8 மணியளவில் இருந்து விசாரணையை தொடங்கினர். இன்றைய விசாரணையின் போதும் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் பல கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி தனக்கு தெரிந்த தகவல்களை பதிலாக கூறியிருந்தார். இவை அனைத்தையும் வாக்கு மூலமாக பதிவு செய்து கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வீடியோ பதிவு செய்து உள்ளனர். வருகிற 12-ந் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் இன்னும் 3 நாட்கள் வரையில் பல்வேறு கேள்விகளை கேட்க அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளது. பின்னர் அவர் புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்படுகிறார்.