ஓபிஎஸ் அணியின் புதிய நாளிதழ் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழ் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம், ‘நமது புரட்சித் தொண்டன்’ என்ற பெயரில் நாளிதழை தொடங்குகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடாக நமது எம்.ஜி.ஆரும், அதிகாரப்பூர்வ சேனலாக ஜெயா டி.வி-யும் செயல்பட்டு வந்தன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பம் காரணமாக, சசிகலா, தினகரன் கட்சியை விட்டு விலக்கப்பட்ட நிலையில், தற்போது நமது எம்.ஜி.ஆர், ஜெயா டி.வி ஆகிய நிறுவனங்களை டி.டி.வி.தினகரன், சசிகலா தரப்பு நிர்வகித்து வருகிறது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்து ‘நமது அம்மா’ என்ற புதிய நாளேட்டை தொடங்கினர். அதில்தான், அதிமுகவின் அதிகாரபூர்வ அறிவிப்பு, கட்சி நிகழ்ச்சிகள், கட்சி சார்ந்த செய்திகள் உள்ளிட்டவை வெளிவந்தன. அதேபோல, நியூஸ் ஜெ என்ற டி.வி சேனலும் தொடங்கப்பட்டது. இதன் ஆசிரியராக மருது அழகுராஜ் செயல்பட்டு வந்தார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒற்றைத் தலைமை மோதலின்போது, நிறுவனர் பெயரில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ் வெளியேறினார். மருது அழகுராஜ், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி தரப்போ, கல்யாணசுந்தரத்தை ‘நமது அம்மா’ நாளிதழுக்கு ஆசிரியர் ஆக்கியது.
இந்நிலையில், ஓபிஎஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தனித்துச் செயல்பட்டு வரும் நிலையில், தங்கள் தரப்பின் குரலை அனைவர் மத்தியிலும் கொண்டு சேர்க்க உதவியாக ஊடகத்தைத் தொடங்கத் திட்டமிட்டு வந்தனர். அந்தவகையில், தற்போது, ‘நமது புரட்சித் தொண்டன்’ என்ற நாளேட்டை வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
‘நமது புரட்சித் தொண்டன்’ நாளேட்டின் ஆசிரியராக, நமது எம்ஜிஆர், நமது அம்மா ஆகியவற்றின் ஆசிரியராக இருந்தவரும், ஜெயலலிதாவுக்கு உரைகள் எழுதித் தந்தவரும், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் ‘நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழ் தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை மருது அழகுராஜ், பூ, பழம், தம்பூலத்துடன் சென்று ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கியுள்ளார்.
‘நமது புரட்சித் தொண்டன்’ நாளிதழ் வெளியீட்டு விழா அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த விழா பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், நாளிதழை வெளியிட, 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைக்கும் அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் நாளிதழைப் பெற்றுக்கொள்ள உள்ளனராம்.