என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று, மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
நடைபயண தொடக்க விழா, ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் வந்து தொடங்கி வைத்து பேசுகிறார். அண்ணாமலை நடைபயணம் குறித்து அமைச்சர் சேகர் பாபு கூறுகையில் ”ஒருவேளை உடலை சீராக வைத்துக் கொள்வதற்காக, மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறாரோ? எனத் தெரியவில்லை. ஆனால், நடைபயணம் மட்டுமல்ல, எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களையும் மீட்டெடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவருடைய நடைபயணத்திற்கு வாழ்த்துக்கள்” என்றார்.