அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை சென்னை ஐகோர்ட் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. ஐகோர்ட்டில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில்தான் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நெடுஞ்சாலை துறையில் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு நடந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 2018 ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது, ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.