உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் தி.மு.க. தொண்டர் ஒருவர் சிக்கிய விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் அமைச்சர் பொன்முடி.. திமுக அரசில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. காலை 7மணியளவில் விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. பொன்முடி வீட்டில் மட்டுமின்றி அவரது மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.

மத்திய படைகளின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் இந்த ரெய்ட்டை நடத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு இந்த ஆரம்பித்த ரெய்டு பல மணி நேரமாகத் தொடர்ந்து வருகிறது. இதுவரை இந்த ரெய்டிற்கு என்ன காரணம் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் மத்திய பாஜகவின் முயற்சி இது இந்த ரெய்டிற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே அமலாக்கத் துறையினர் இந்த ரெய்டின் போது அமைச்சர் பொன்முடிக்கு மனு கொடுக்க சென்ற திமுக தொண்டரும் இந்த சோதனையில் சிக்கியுள்ளார். அவரது மொபைலையும் அங்கிருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவரை வீட்டிற்குள் வைத்திருந்த அதிகாரிகள் அந்த திமுக தொண்டரிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரே அவர் சற்று நேரத்திற்கு முன்பு வெளியே அனுப்பப்பட்டார்.

வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த திமுக தொண்டர், ‘‘நான் அமைச்சரிடம் எங்கள் தொகுதியில் இருக்கும் கலைக்கல்லூரி விவகாரம் குறித்து மனு கொடுக்கவே சென்றிருந்தேன். காலை 8 மணியளவில் நான் மனு கொடுக்க வந்தேன். அப்போது கேட்டின் அருகே சென்று எட்டிப் பார்த்தேன். உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் என்னை உள்ளே இழுத்தனர். என்னிடம் இருந்த மொபைலையும் பிடுங்கிக் கொண்டனர்.

நான் இதய நோயாளி வெளியே செல்ல வேண்டும் என்றேன்.. என்னை உள்ளே விடவில்லை. வெளியே இருப்பவர்கள் டீ வாங்கிக் கொடுத்த போதிலும்.. அதையும் உள்ளே விடவில்லை. சற்று நேரத்திற்கு முன்பு அவர்களாகவே வந்து மொபைலை எடுத்துக் கிளம்பலாம் என்றார்கள். இருப்பினும், அப்போது நான் கிளம்ப மாட்டேன் என்றேன். இருப்பினும், வலுக்கட்டாயமாக என்னிடம் மொபைல கொடுத்து வெளியே அனுப்பிவிட்டனர்.

உள்ளே 5, 6 அதிகாரிகள் இருக்கிறார்கள். அமைச்சரும் உள்ளே தான் இருக்கிறார்.. எதற்காக இங்கே வந்தீர்கள்.. என்ன எடுத்துவிட்டு வந்தீர்கள் எனக் கேட்டார்கள். அவர்களிடம் உரியப் பதிலை அளித்துவிட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு தொடரும் நிலையில், உள்ளே சிக்கிய திமுக தொண்டர் இப்போது வெளியே அனுப்பப்பட்டுள்ளார். கடந்த மாதம் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். அந்த சோதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இப்போது அவர் நீதிமன்ற காவலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal