அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கட்சி நிர்வாகிகளை அறிவித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகின்றனர். இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்தினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பிரமாண்டமான மாநாட்டை ஆகஸ்டு 20-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளார். அவர் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் இந்த மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார்.
அ.தி.மு.கவின் அடிப்படை தொண்டர்களை இழுக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் தீவிரமாக உள்ளார். எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் அழைத்து அரவணைத்து வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தனது செல்வாக்கை மேலும் நிலை நிறுத்திக் கொள்ளும் வகையில் அடுத்தகட்ட நகர்வினை முன்னெடுத்து செல்கிறார்.
அந்த வகையில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று கூட்டியுள்ளார். இந்த கூட்டம் எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்க வந்த மாவட்ட செயலாளர்கள், மண்டபத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த நோட்டில் கையெழுத்திட்டனர். அவர்களுக்கு பேட்ஜ் வழங்கப்பட்டு ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு வந்தார். தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு அவரை வரவேற்றனர்.
பின்னர் சிறிது நேரம் ஓ.பன்னீர்செல்வம் தனியாக தனது அணியை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து மேஜைக்கு வந்து அமர்ந்திருந்த நிர்வாகிகள் ஓ.பி.எஸ் வாழ்க என்று கோஷமிட்டனர். இதனைதொடர்ந்து நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசினார்கள். அவர்களின் கருத்துக்களை ஓ.பன்னீர் செல்வம் கேட்டறிந்தார். எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்தும் நிலையில் அவருக்கு போட்டியாக கொங்கு மண்டலத்தில் மிகப்பிரமாண்ட அளவில் மாநாடு ஒன்றை நடத்த அதில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள் இந்த மாநாட்டை சேலம் அல்லது கோவையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் உள்ள தொண்டர்களின் ஆதரவை தங்கள் அணிக்கு பெற முடியும் என்ற கருத்தை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். அதன்படி சேலத்தில் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாட்டை ஆகஸ்டு மாதமே நடத்தவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.