புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய மருத்துவர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முதல் நிலை களப்பணியாளர்களாக பணியாற்றி பெருந்தொற்றின் கோரப்பிடியில் இருந்து மனித உயிர்களை காப்பாற்றியதற்காக மருத்துவர்களுக்கு நன்றி சொல்வதற்கு ஏற்ற தருணம் இது.
தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றி மருத்துவர்களின் கடமை உணர்வை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார்கள். நம் அனைவரது வாழ்விலும் மருத்துவர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கொரோனா வெளிப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தன்னலமற்ற, ஈடு இணையில்லாத சேவையைப் போற்றுகின்ற, மதிக்கின்ற அதே வேளை நம்முடைய உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்களையும் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.