தமிழகத்தில் கலைஞரின் குடும்ப அரசியல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் கடுமையயக விமர்சித்த விவகாரம்தான் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மத்தியப்பிரதேச மாநிலம் சென்றுள்ளார். ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, போபால் நகரில் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் எதிர்க்கட்சிகள் சந்தித்த புகைப்படத்தை பார்த்தால் 20 லட்சம் கோடி ரூபாய் ஊழல் தான் தமக்கு தெரிவதாக விமர்சித்தார்.

மேலும், முத்தலாக் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, எகிப்து, இந்தோனேசியா, கத்தார், ஜோர்டான், சிரியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் முத்தலாக் முறை அமலில் இல்லை என்று சுட்டிக்காட்டினார். 90 சதவீத சன்னி முஸ்லிம்களைக் கொண்ட எகிப்தில் முத்தலாக் முறை 80 ஆண்டுகளுக்கு முன்னரே ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி அண்மையில் அரசு முறை பயணமாக எகிப்து சென்று திரும்பினார் என்பது கவனிக்கத்தக்கது.

ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டு விதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது என பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பிரதமர் மோடி பேசினார்.

மேலும், திமுக-வுக்கு வாக்களித்தால், கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலனடைவார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், சோனியா காந்தி குடும்பம் மட்டுமே பலனடையும். எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் நாட்டிற்கு உகந்தது அல்ல என்றார். நாட்டுக்காகவும், நாட்டு நலனுக்காகவும், உங்கள் சந்ததிகள் முன்னேற்றத்திற்கும் மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal