கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. அளித்த முக்கியமான தேர்தல் வாக்குறுதி, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்தான். இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஏன், சில மகளிர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரடியாகவே கேட்டனர். இந்த நிலையில்தான் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக கோட்டையில் இன்று முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது. இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

எனினும், அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கையாக உள்ளது. 1 கோடி மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், வரும் செப்டம்பர் முதல் செயல்படுத்தப்பட இருக்கும் நிலையில், இதற்கு தகுதியான பயனாளிகள் தேர்வுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கான பணிகளை சமூக நலத்துறை மற்றும் நிதி, வருவாய் துறைகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

மகளிருக்கான உரிமைத்தொகை வங்கிகளில் நேரடியாக வரவு வைக்கப்படுமா? அல்லது ரேஷன் மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், ரேஷன் கடைகளில், மைக்ரோ ஏடிஎம் கருவிகள் வாயிலாக பட்டுவாடா செய்யப்படுமா? என்று இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இன்னும் ஒரு சிலமாதங்களே இருப்பதால் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தான், இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal