நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானம் வரை காரில் செல்வதற்கான அனுமதியை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது. அதாவது நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் எடப்பாடி பழனிசாமி விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரை தனது காரிலேயே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அனுமதியை கொடுத்து இருப்பதாக விமான போக்குவரத்து துறை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
விமான நிலையத்தில் பயணிகள் விமான ஓடுதளம் வரை பஸ்சில் சென்று விமானத்தில் ஏற வேண்டியிருக்கும். மிக மிக முக்கியமான பிரமுகர்களுக்கும் மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரையிலும் காரிலேயே செல்ல மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி கொடுத்து உள்ளது. தற்போது அத்தகைய அனுமதியைத்தான் எடப்பாடி பழனிசாமிக்கும் விமான போக்குவரத்துறை வழங்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு விமானத்தில் சென்றார். மதுரை விமான நிலையத்தில் வைத்து ஓடுதளத்தில் இருந்து விமான நிலையம் வரை பஸ்சில் எடப்பாடி பழனிசாமி வருகை தந்த போது அவருடன் பஸ்சில் பயணம் செய்த ராஜேஸ்வரன் என்ற நபர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து துரோகி என நேரடியாக விமர்சித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததால் அவரது பாதுகாவலர் அவரின் செல்போனை பறித்தார். பின்னர் விமான நிலையத்தில் அதிமுகவினரும் அந்த நபரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு இத்தகைய அனுமதியை மத்திய அரசு கொடுத்துள்ளதாக தெரிகிறது.