அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு தமிழகத்தில் அமலாக்கத்துறை பற்றிய பேச்சுகள் அதிகரித்துள்ளன. அதன் அதிகாரம் என்ன என்பது பற்றி பார்ப்போம்..!
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது அமலாக்கத்துறையின் மீது மீண்டும் பார்வையை திரும்ப வைத்துள்ளது. மூத்த கேபினட் அமைச்சர் செந்தில் பாலாஜி 18 மணிநேர விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். செந்தில் பாலாஜி கைது தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், திமுகவுடன் மோத வேண்டாம் என பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் பாஜகவின் ஏஜெண்ட்டாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தாலும், பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் கைதுகளின் வரிசையில் செந்தில் பாலாஜியும் இணைந்துள்ளார். இதற்கு முன்பு அரசியல் பலமிக்க 14 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள், ஒரு ஐபிஎஸ் அதிகாரி, ஒரு ஐஆர்எஸ் அதிகாரி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 மூத்த அரசியல்வாதிகள் இதுவரை அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் வெவ்வேறு மாநிலங்களில் செல்வாக்குமிக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமலாக்கத்துறை விசாரித்து வரும் 726 வழக்குகளில் 181 அரசியல் தலைவர்களுடன் தொடர்புடையவை என்று அமலாக்கத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரசியல், அதிகார ஊழல், வங்கி மோசடிகள், பணமோசடி தொடர்பான 191 முக்கியமான வழக்குகள் இப்போது விசாரணையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைதுகள் தவிர, குறைந்தது 115 மூத்த அரசியல்வாதிகள் மற்றும் 24க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐஆர்எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி சோதனையும் நடத்தியுள்ளது அமலாக்கத்துறை. நிலக்கரி, கால்நடை, வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக மேற்குவங்கத்தில் மட்டும் 8 ஐபிஎஸ் அதிகாரிகள், 3 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் விசாரணை வளையத்தில் உள்ளனர். நிலக்கரி ஊழல் தொடர்பாக, ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் வருமான வரித்துறையில் நான்கு ஐஆர்எஸ் அதிகாரிகள், ஐந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் விசாரணையில் உள்ளதாக அமலாக்கத்துறையின் அந்த மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் எங்கே இருந்தது என்றே தெரியாமல் இருந்த அமலாக்கத்துறை, இப்போது இந்தியாவின் கடுமையான மத்திய விசாரணை நிறுவனமாக மாறியுள்ளது. தற்போதைய இயக்குனரான சஞ்சய் மிஸ்ராவின் கீழ், இந்தியாவின் முக்கிய ஊழல் மற்றும் தேசிய பாதுகாப்பு வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 2013ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, நிதியமைச்சகத்தின் உயர் பதவியில் இருந்த சஞ்சய் மிஸ்ரா, பின்னர் உள்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், 2019ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்ட பிறகு, பணமோசடி மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பாக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மற்ற அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட்டனர்.
அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் மிஸ்ரா தனித்துவமிக்க அதிகாரியாக அறியப்படுகிறார். எந்தவொரு அரசியல்வாதியையும் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களை அவர் சந்திப்பது கிடையாது என்கின்றன அவருக்கு நெருக்கமான அதிகார வட்டத்தினர். எந்தசார்பும் இல்லாமல் விரைவான விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுப்பதையே முக்கிய கூட்டங்களின்போது அவர் வலியுறுத்துவதாக கூறுகிறார்கள். அமலாக்கத்துறை இயக்குனராக அவரது பதவிக்காலம் மத்திய அரசால் மூன்று முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட அவரது பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும், “அமலாக்கத்துறையை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கூறும் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களும், எஃப்ஐஆர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல வழக்குகள் இப்போதும் விசாரணையில் உள்ளன. அவர்களால் ஆதாரங்களை மறுக்க முடியுமா?” என அமலாக்கத்துறையின் மூத்த அதிகாரி கேள்வி எழுப்புகிறார். எங்களுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எந்த அரசியல்வாதியும் எங்களுடன் பேசுவதில்லை. சட்டம் அதன் கடமையை செய்கிறது என்கிறார் அவர்.
ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப, காங்கிரஸ் புலனாய்வு அமைப்பு, பாஜக புலனாய்வு அமைப்பு, கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என எதிர்க்கட்சிகளால் சிபிஐ அழைக்கப்படுகிறது. அந்த வகையில், மோடியின் புதிய சிபிஐ என்று அமலாக்கத்துறை அழைக்கப்படுகிறது.
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ என்பது இந்தியாவின் உள்நாட்டு குற்ற விசாரணை நிறுவனமாகும். பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் கீழ் சிபிஐ செயல்பட்டு வருகிறது. முதலில் லஞ்சம் மற்றும் அரசாங்க ஊழலை விசாரிப்பதற்காக சிபிஐ விசாரணை அமைப்பு அமைக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டு முதல் இந்திய அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட மத்திய சட்டங்களின் மீறல்கள், பல மாநிலங்களில் திட்டமிட்டு நடத்தப்படும் குற்ற சம்பவங்கள், சர்வதேச வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்கும் அமைப்பாக விரிவுபடுத்தப்பட்டது. சர்வதேச நிறுவனமான இண்டர்போல் உடனும் இணைந்து செயல்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிகளில் இருந்து சிபிஐக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமலாக்க இயக்குனரகம் என்பது உள்நாட்டு சட்ட அமலாக்க நிறுவனம் மற்றும் பொருளாதார உளவுத்துறை நிறுவனமாகும். மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. பணமோசடி, அந்நியச் செலாவணி மீறல்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்கிறது. கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் புழக்கத்தைத் தடுப்பதும், அந்நியச் செலாவணி மற்றும் பணமோசடியைத் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
சிபிஐ போலல்லாமல், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுத்த முடியாத பல்துறை அமைப்பாக அமலாக்கத்துறை உள்ளது. பல்வேறு சட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 அதற்கான அதிகாரங்களை வழங்குகிறது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 இன் கீழ், பரிவர்த்தனை கட்டுப்பாட்டு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் குறித்து விசாரிக்கும் அமைப்பாக நீதித்துறைக்கும் இருக்கும் சில அதிகாரங்களை பெற்றுள்ளது. அத்துடன் குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரத்தையும் அமலாக்கத்துறை பெற்றுள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டதன் மூலம், நாட்டின் வலுவான சட்டங்களில் ஒன்றாக பணமோசடி தடுப்புச் சட்டம் மாறியுள்ளது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளுக்காக, சட்டத்தை 2018 ஆம் ஆண்டில் இயற்றியதன் மூலம் அமலாக்கத்துறையின் அதிகாரங்களை இன்னும் சக்திவாய்ந்ததாக மத்திய அரசு மாற்றியது.
சிபிஐ போலல்லாமல், ஒரு வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு மத்திய அல்லது எந்த மாநிலத்தின் பரிந்துரையோ அல்லது நீதிமன்றத்தின் வழிகாட்டுதலோ அமலாக்கத்துறைக்கு தேவையில்லை. எப்ஐஆர் இருந்தால் எந்த வழக்கையும் விசாரிக்கலாம். ஆனால், இந்த நிறுவனம் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ளது, உள்துறை அமைச்சகத்தின் கீழ் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநிலங்களவையில் பணமோசடி தடுப்பு (திருத்தம்) மசோதா, 2012யை அறிமுகப்படுத்தி பேசிய அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “முதலாவதாக, பணமோசடி என்பது தொழில்நுட்ப ரீதியாக வரையறுக்கப்பட்ட குற்றம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ‘பணமோசடி’ என்பது பேச்சு வார்த்தையில் நாம் புரிந்து கொள்ளும் விதம் அல்ல. இது தொழில்நுட்ப ரீதியாக வரையறுக்கப்பட்ட குற்றமாகும்.” என்றார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை மற்றும் அதே சட்டத்தின் கீழ் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் எத்தனை அரசியல் வாதிகள் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!