தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் ‘கட்சியில் உள்ள கீழ் மட்ட நிர்வாகிகள், பலனை எதிர்பார்க்காமல் உழைத்தால், உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்’ என்றார். அந்த வகையில் கட்சி பணிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு எதையும் எதிர்பார்க்காமல் நலத்திட்ட உதவிகளை செய்து வந்த தீபா சின்ராஜ் திருச்சி மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இது பற்றி உப்பிலியபுரம் உடன் பிறப்புக்களிடம் பேசினோம்.

‘‘சார், உப்பிலியபுரம் ஒன்றியத்தைப் பொறுத்தளவில் அ.தி.மு.க. கோட்டையாக திகழ்ந்தது. தி.மு.க. கோட்டையாக மாறியிருக்கிறது. இதற்கு காரணம், உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் ந.அசோகன், மாவட்டக் கவுன்சிலர் தீபா சின்ராஜ் போன்றோர்தான்!

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பச்சை மலை பகுதிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருன் நேரு வந்தார். அப்போது, அருண் நேருவே மலைக்கும் அளவிற்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளைக் கொடுத்து அசத்தியவர் தீபா சின்ராஜ்தான்.

ஆட்சிக்கு வந்ததும், சில நிர்வாகிகள் கனிம வளங்களை கொள்ளையடிப்பதிலும், கமிஷன் பார்ப்பதிலும் குறியாக இருக்கிறார்கள். இதனால்தான் மற்ற நிர்வாகிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. ஆனால், ந.அசோகன் மற்றும் தீபா சின்ராஜ் போன்றவர்கள் எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் உடன் பிறப்புகளுக்கு உதவி வருகின்றனர். இதனால்தான் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தி.மு.க. உயிர்ப்புடன் இருக்கிறது.

இந்த நிலையில்தான், திருச்சி மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு ஊரகப்பகுதிகளில் இருந்து 10 பேர் உறுப்பினர்களாகவும், நகரப் பகுதிகளில் இருந்து 8 பேர் உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் உப்பிலியபுரம் ஒன்றியம் ரெட்டியார் பட்டியைச் சேர்ந்த தீபா சின்ராஜும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த தேர்வைதான் உப்பிலியபுரம் உடன் பிறப்புக்கள் கொண்டாடி வருகின்றனர்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal