ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் முடிய இருக்கிறது. இந்தத் தேர்தலில் வெல்லப் போவது யார்? என ‘தமிழக அரசியல்’ டாட் காம் சார்பில் கள நிலவரத்தை அப்படியே தருகிறேம்-…!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் முதலில் தி.மு.க.வும் உள்ளுக்குள் தடுமாறியது. காரணம், காங்கிரஸ் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என அக்கட்சிக்குள் கோஷ்டி பூசல் வெடித்தது. இந்த பிரச்னைக்கு ஒரே ‘கால்’ மூலமாக முற்றுப்புள்ளி வைத்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்த பின்னணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்தார். இது கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அடுத்து அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில், இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? வேட்பாளர் யார்..? மூன்று அணிகளும் களத்தில் இறங்குமா? என்பதை எல்லாம் ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்து இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிட வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

கள நிலவரம்..?

தி.மு.க.வைப் பொறுத்தளவில் ஆரம்பித்தில் கொஞ்சம் மெத்தனப் போக்காக இருந்தார்கள். இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன், தினமும் தொகுதி மக்களை தேர்தல் பணிமனையில் அமர்த்தி 200 ரூபாய், 300 ரூபாய் என கொடுத்தனர். எடப்பாடி பழனிசாமி முதன் முதலாக பிரச்சாரத்திற்கு வந்த பிறகு, வாக்காளர்களுக்கு மூன்று வேளை சாப்பாடு (அசைவம் & சைவம்) மாலையில் ரூ.500 கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி சில வியூகங்களை வகுத்தவுடன், தி.மு.க. தலைமையிலிருந்து அமைச்சர்களுக்கு எரிச்சரிக்கை மணி அடித்தவுடன், காலை மற்றும் மாலையில் ரூ.500 வழங்கப்பட்டது. வாக்காளர்களை (பட்டியில் ) தேர்தல் பணிமனையில் அடைத்து வைப்பது, காது குத்து நிகழ்ச்சி, சுற்றுலா என பலவிதங்களில் அழைத்துச் சென்று பரிசு, பணம் மற்றும் விருந்து மழையில் குளிப்பாட்டியது தி.மு.க.!

தி.மு.க.வின் வியூகங்களைப் பார்த்து மிரண்டு போன எடப்பாடி பழனிசாமி, ஒரு கட்டத்தில் கொந்தளித்து ‘நீ வேட்டி கட்டிய ஆம்பளையா?’ என முதல்வரைப் பார்த்துக் கேட்டார். காரணம், எடப்பாடி பிரச்சாரத்திற்கு செல்லும்போது, தொகுதி மக்கள் யாரும் இல்லை. எல்லாம் தி.மு.க.வின் ‘பட்டியில்’ அடைக்கப்பட்டிருந்தனர். பவானி மற்றும் நாமக்கல்லில் இருந்து கூட எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டத்திற்கு ஆட்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அடுத்தாக, வாக்களர்களுக்கு தி.மு.க. தினம் தினம் பணம் கொடுத்து வந்த நிலையில், விடியற்காலையில் முதன் முதலாக பட்டுவாடாவை ஆரம்பித்தது அ.தி.மு.க.! இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுபவர்களை அடையாளம் கண்டு, ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்தது. இதனை ஸ்மெஸ் செய்த உதயநிதிஸ்டாலின், உடனடியாக செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு, தி.மு.க.வும் வாக்குக்கு ரூ.3,000 கொடுத்தது.

இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வின் பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால், 4 சதவீத வாக்குகள் அ.தி.மு.க.விற்கு அதிகரித்திருப்பதாக உளவுத்துறை மூலம் முதல்வருக்கு தகவல் சென்றது. ஒட்டு மொத்த கட்சியும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததால், அ.தி.மு.க.வினரும் உற்சாகமாக களத்தில் இறங்கி வேலை பார்த்தனர். இது தி.மு.க.விற்கு கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தியது.

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் எண்ணவோட்டத்தை மனதுக்குள் நன்றாக உணர்ந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, மார்ச் பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்றார். இது, அப்படியே கிழக்கு தொகுதியில் உள்ள மகளிரின் வாக்குகளை கவர்ந்துவிட்டது. எடப்பாடிக்கு அதிகரிப்பதாக இருந்த வாக்கு சதவீதமும் அப்படியே குறைய ஆரம்பித்துவிட்டது.

மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் மகளிர் இலவச பேருந்து திட்டம் நடைமுறையில் உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குக்காக காலை சிற்றுண்டி திட்டம் நிறைவேற்றி உள்ளோம். தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். உறுதி அளித்த வாக்குறுதிகளை இந்தாண்டுக்குள் நிறைவேற்றி காட்டுவோம்’’ என்று பேசினார்.

ஈரோடு கிழக்கில் முதல்வரின் பிரச்சாரம், அமைச்சர்களின் பரிசுப் பொருட்கள் என அப்பகுதி மக்கள் கடந்த 15 நாட்களாகவே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். குறிப்பாக ஒவ்வொரு வாக்குக்கும் தினசரி கொடுத்ததிலிருந்து கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒவ்வொரு வாக்குக்கும் தி-.மு.க. சார்பில் 13 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் நாளை ஒரு ரவுண்டு இருக்கிறது என்கிறார்கள்.

அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் கொலுசு மற்றும் 2000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து இறக்குவார்களா என்பது தெரியவில்லை. முதல்வர் பிரச்சாரம் செய்யும் போது, தொகுதி மக்கள் அனைவரும் அங்கு சென்றுவிட்டதால், எடப்பாடி பழனிசாமி வேறுவழியில்லாமல் சேலத்திற்கு சென்றுவிட்டார்.

தமிழக மக்களைப் பொறுத்தளவிற்கு வாங்கிய பணத்திற்கு வஞ்சனை இல்லாமல் வாக்களித்துவிடுவார்கள். அதுவும் கிழக்கு தொகுதி மக்கள் ‘யாரு அதிகம் கொடுத்தார்களோ அவங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு’ என்று அடித்துக் கூறிவிட்டனர்.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. குறைந்த பட்சம் 20 ஆயிரம் வாக்குகள் வாங்கும்… அதிக பட்சம் 30 வாக்குகள் வாங்கும். தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும் என்பதுதான் தற்போதைய இறுதி நிலவரம். அ.தி.மு.க. டெபாசிட் பெறவே முச்சுத்திணற வேண்டிய நிலையில் இதுக்கிறது.

எனவே, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பரிசு மற்றும் பண மழை (இது தொடர்பாக ஆதாரப் பூர்வமாக வீடியோக்கள் வெளியாகியிருக்கிறது. வாக்காளர்களே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்)பொழிந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டால் அ.தி.மு.க. வெல்லும். இல்லாவிட்டால் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றிவாகை சூடும்… இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்பதுதான் களநிலவரமாக இருக்கிறது!

ஈரோடு கிழக்கில் பணம் வெல்லுமா..? அல்லது தேர்தல் ரத்தாகி ஜனநாயகம் வெல்லுமா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal