கள்ளக்குறிச்சியில் பெண் அரசு அதிகாரியை சாதிரீதியாக அவதூறு செய்ததாக, ரிஷிவந்தியம் தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது நான்கு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஆனால், திடீர் திருப்பமாக, “புகார் கொடுத்த பெண் அதிகாரி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அதை மறைத்து சாதிரீதியாக அவதூறு செய்ததாக எம்.எல்.ஏவுக்கு எதிராக பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என எம்.எல்.ஏ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த லலிதா, கடந்த மாதம் 19 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனராக பணியாற்றினேன். கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்’ எனக் கூறியுள்ளார்.
காலை உணவு திட்டத்தில் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெண் சமையலர் பணி நியமனம் தொடர்பான விவரத்தைக் குறிப்பிட்டு சாதிரீதியாக தன்னை எம்.எல்.ஏ இழிவுபடுத்தியதாகப் புகார் மனுவில் அவர் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் அளித்த புகாருக்கு நாற்பது நாட்களுக்குப் பிறகு வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தி.மு.க தரப்பில் கொந்தளிக்கின்றனர்.
“இது பொய் வழக்கு” எனக் கூறும் வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவாளர்கள், ” திட்ட இயக்குநர் லலிதா மீது பல்வேறு முறைகேடு வந்ததால் கடந்த 13 ஆம் தேதி அவரை ராமநாதபுரத்துக்கு இடமாறுதல் செய்தனர். பெரம்பலூரில் அவர் பணி செய்தபோதும் முறைகேடு புகார்களுக்கு ஆளாகியதால் இடமாற்றம் செய்யப்பட்டார்” என்கின்றனர்.
“வசந்தம் கார்த்திகேயனுக்கு எதிராக இப்படிப்பட்ட பெண் அதிகாரியை பகடைக்காயாக அரசியல்ரீதியாக பயன்படுத்தியுள்ளனர். சொல்லப் போனால், பணியில் சேர விரும்பிய தலித் பெண்ணை, சாதிரீதியாக இழிவுபடுத்தியது லலிதா தான்” எனக் கூறுகின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.
இதுதொடர்பாக தியாக துருகம் காவல் நிலையத்தில் லலிதா மீது புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தன்னை சாதிரீதியாக இழிவுபடுத்தியதாக பாதிக்கப்பட்ட தேவிபாலா என்ற பெண் புகார் மனுவில் விரிவாக தெரிவித்துள்ளார். புகார் மனுவில், ‘தகடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலர் பணி காலியாக இருந்ததால் விண்ணப்பித்தேன். ஆனால், ‘தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நீ.. ஊர்த் தெருவுக்குள் சமையல் செய்யக் கூடாது என உள்ளூரில் இருந்து எதிர்ப்புகள் வந்ததாகக் கூறி பணி ஆணையைத் தர லலிதா மறுத்துவிட்டார்’ எனப் புகார் மனுவில் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் கவனத்துக்கு வந்ததும் பெண் அதிகாரி லலிதாவை தொடர்பு கொண்டு, ‘அரசு அதிகாரியாக இருந்து கொண்டு சாதி பாலிடிக்ஸ் செய்வது தவறு’ என அறிவுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம், கடந்த மாதம் அக்டோபர் 19 ஆம் தேதியே ஊடகங்களில் பரவலாக வெளியானது. ஆனால், தன்னை சாதிரீதியாக எம்.எல்.ஏ இழிவுசெய்ததாக பொய்யான புகாரை லலிதா கொடுத்துவிட்டதாக, தி.மு.கவினர் கூறுகின்றனர்.
தொடர்ந்து, தங்கள் சாதி பெண்ணை இழிவுபடுத்தியதால் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திட்ட இயக்குநர் லலிதாவிடம் கேட்டுள்ளனர். அப்போது ‘நீ என்ன சாதி?’ எனக் கேட்டு தங்களை இழிவுபடுத்தியதாக தியாக துருகம் காவல்நிலையத்தில் இரண்டு பெண்கள் லலிதா மீது புகார் மனு அளித்துள்ளனர்.
பெண் அதிகாரி மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆனால், உண்மைக்கு மாறாக வசந்தம் கார்த்திகேயன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லலிதாவால் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணுக்கு ஆதரவாகவே எம்.எல்.ஏ பேசினார். அப்போதும் பெண் அதிகாரியை அவர் அவதூறாக பேசவில்லை” என்கின்றனர் எம்.எல்.ஏ தரப்பு ஆதரவாளர்கள்.
“கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை வேகம் எடுத்து வரும் நிலையில், அதை மடைமாற்றும் வகையில் தி.மு.க எம்.எல்.ஏ மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம்” எனக் கொந்தளிக்கின்றனர், ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.கவினர்.
