திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த தீர்ப்பு அளித்தது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அதிமுக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களிடம் பேசி, கட்சி தாவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.தமிழ்நாடு செய்திகள்
அதைத் தொடர்ந்து விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய், ராஜினாமா செய்தார். இதனால் மொத்தம் 7 தொகுதிகள் காலியாகின.
இவற்றில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடைகோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து ஜூலை 10ம் தேதி உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தில், இடைத்தேர்தல் அறிவிக்காதது என்பது நிரந்தரமானது அல்ல. உயர் நீதிமன்றம் வழக்கை முடித்தவுடன் தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முதல்வர் விஜய் தரப்பில், இடைத்தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தக் கூடாது. விரைந்து தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற வாதம் வைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்துவதற்கு தயாராக உள்ளோம். ஆனால் இதுவரை இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதி தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. இடைத்தேர்தல் நடத்துவதற்கு 6 மாத காலம் அவகாசம் உள்ளது. தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் முன்பு மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது, என தெரிவிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் முடிவெடுத்த பிறகு திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்கப்படும். இடைத்தேர்தல் நடத்துமாறு, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் விஜய் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பை தள்ளிவைத்து தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது. அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அனுமதி அளித்துள்ளனர்.
