கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி, டிஜிபியிடம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி நேற்று புகார் மனு அளித்திருந்தார். இன்று சென்னை லோக் பவனில் கவர்னர் அர்லேகரை உதயநிதி சந்தித்து மனு அளித்துள்ளார். அந்த மனுவில், அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வலியுறுத்தியுள்ளார்.
புகார் மனு அளிக்க வந்தவரை தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்க ஆணையிடுமாறு உதயநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் உதயநிதி பேசியதாவது; பெண் கலெக்டருக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்த ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று டிஜிபியிடம் மனு கொடுத்தோம். இந்த புதிய ஆட்சி அமைந்த 6 மாதத்தில் நடந்த குற்றச்சம்பவங்களில் 80 சதவீதத்திற்கு மேலானோர் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தான் குற்றவாளிகளாக இருக்கின்றனர். எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்.
முதல்வர் தூக்கத்தில் இருந்து எழுந்து உண்மையாக என்ன நடக்கிறது என்பதை அறிந்து கைது செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். டிஜிபி அலுவலகத்தில் நான் கொடுத்த பேட்டியை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதன்மூலம், முதல்வர் இன்னும் திருந்தவில்லை என்று தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல், குற்றவாளிகள் பக்கம் சொகுசா படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார்.
முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் தொடர்ந்து குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தலைமை செயலாளர் 116 நாட்களாக மூடிமறைத்துள்ளார். முதல்வரின் பார்வைக்கு எடுத்து போனாரா? இல்லையா? இந்தக் குற்றத்திற்கு தலைமை செயலர், முதல்வரும் உடந்தை. எம்எல்ஏவை காப்பாற்ற தலைமை செயலர் கலெக்டரிம் பேரம் பேசியுள்ளார். முதல்வர், தலைமை செயலரை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும். இந்த சம்பவம் நடக்கவே இல்லை என்று கூறிய 3 அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
