பெண் கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்பிய விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக பிரவின் குமார் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டிருப்பது ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. காரணம், வேறு ஒரு அதிகாரியின் பெயரை அரசு தரப்பு பரிந்துரைத்ததை நீதிபதி ஏற்கவில்லை.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷுக்கு எதிரான வழக்கை வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் ஐ.ஜி. பிரவீன் குமார் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்போது நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், கடந்த ஜூலை மாதமே புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் ஏற்பட்டது எனக் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரத்தில் யாரையும் பாதுகாக்க முயற்சிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, வழக்கின் விசாரணையை எந்த அதிகாரி மேற்கொண்டு வருகிறார் என நீதிபதி கேட்டார். அதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வழக்கை வடக்கு மண்டல ஐ.ஜி. பிரவீன் குமார் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் வேறு ஒரு உயர் அதிகாரியின் பெயரைப் பரிந்துரைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்த நீதிபதி, பிரவீன் குமாரே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனால், வழக்கின் விசாரணைப் பொறுப்பு தற்போது வடக்கு மண்டல ஐ.ஜி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யார் இந்த பிரவீன் குமார்?

பிரவீன் குமார் அபிநப், 2005-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அணியைச் சேர்ந்த அதிகாரி. இதற்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையராகவும், காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஐ.ஜி. பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். கடந்த மே மாத ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றத்தின்போது வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்கள் இவரது காவல் மண்டலத்தின் கீழ் வருகின்றன.

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக ஐ.ஜி. நியமிக்கப்பட்டிருப்பதால், புகாரில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, குறுஞ்செய்திகள் தொடர்பான ஆதாரங்கள், புகார் அளிக்கப்பட்ட காலகட்டம் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கைகள் விசாரணையின் முக்கிய அம்சங்களாக இருக்கும். தவிர பிரவீன் குமார் ஐ.பி.எஸ். வழக்கை மிகவும் நேர்யை£கவும், திறம்படவும் நடத்துபவர் என்பதால் ஆளும் தரப்பு அச்சத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீதான புகார் என்பதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal