திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்து அமைப்பினர், பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றாமல், மாவட்ட நிர்வாகம் திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை பிறப்பித்தது. இதனால் அப்போதைய ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கார்த்திகையின் 2-வது நாளன்று மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் வழக்கு தொடர்ந்தவர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, தீபம் ஏற்றச் சென்றவர்களை மலைப் படிக்கட்டில்கூட கால் வைக்க போலீஸார் அனுமதிக்கவில்லை.
இதனால் 2-வது நாளிலும் தீபம் ஏற்ற முடியாமல் போனது. இந்த நடவடிக்கையால் அப்போதைய காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினர்.
தற்போது, இந்த ஆண்டு மட்டும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்றும் பொறுப்பை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், மாநகர் காவல் ஆணையர் போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மத்திய படையின் பாதுகாப்பை கோரலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்துக்கு மாவட்ட நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாமல் அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொண்டு, பகிரங்கமாக மன்னிப்பு கோரியது போல் இந்த முறை நடந்துகொள்ள மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், அதிகாரிகளும் தயாராக இல்லை. இடைக்கால உத்தரவுபடி ஒரு நாள் தீபம் ஏற்றிவிட்டு, வழக்கின் இறுதியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் அதிகாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்திகை தீபத்திருநாளுக்கு இன்னும் 1 நாள்தான் உள்ளது. இருப்பினும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், கோயில் நிர்வாகம் தரப்பில் நேற்று இரவு வரை முன்னேற்பாடுகளை செய்யவில்லை. இதனால் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என எதிர்பார்த்து மதுரை மக்கள் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் சிலர் கூறும்போது, “தமிழக அரசு, தீபத்தூண் வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஏற்பாடுகள் நடப்பதாக கூறினாலும், இன்னும் தெளிவான முடிவெடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசின் ஆலோசனையை பின்பற்றுவதா? உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதா? என்ற குழப்பத்தில் ஆட்சியர் உள்ளார்” என்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தால், தீபம் ஏற்றப்படும் இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்வார். ஆனால், இதுவரை அவர் திருப்பரங்குன்றம் செல்லவில்லை. காவல் ஆணையர் சட்டப்படி செயல்படவே விரும்புவதாக மேலிடத்திடம் தெரிவித்துவிட்டார்.
உச்ச நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானால் தங்களின் பதவியை காப்பாற்ற யாராலும் முடியாது என்பதால், அத்தகைய முடிவை ஏன் எடுக்க வேண்டும் என உயர் அதிகாரிகள் கருதுகின்றனர். அரசின் திடமான வழிகாட்டுதல், ஆலோசனை இல்லாமல் ஆட்சியர், காவல் ஆணையர் பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
