தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகி தவெகவில் இணையலாம் என்று வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
மேலும், தான் ஆண்டுதோறும் பழனி முருகனுக்கு காவடி எடுப்பதாகக் கூறிய அண்ணாமலை, தனக்கு முருகப்பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் சொல்லித்தர வேண்டாம் என்றும் காட்டமாகக் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘‘மாணிக்கம் தாகூர் அண்ணனுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள். காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும். அது அவருக்கும் நல்லது காங்கிரஸ் இயக்கத்துக்கும் நல்லது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எம்.எல்.ஏ. எந்தத் தவறும் செய்யவில்லை. ஏதோ மாவட்ட ஆட்சியர்தான் தவறு செய்ததைப் போலவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது, விலைவாசி உயர்வு எதுவும் இல்லை என்பதைப் போலவும் பேசுவது கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்தான்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு அதிகமாக ஆதரவாகப் பேசும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கக்கூடிய மாணிக்கம் தாகூர்தான். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அந்த எம்.எல்.ஏ. மெசேஜ் அனுப்பியிருக்கிறாரா, இல்லையா என்ற விவகாரத்தில் எம்.எல்.ஏ. மெசேஜ் அனுப்பவில்லை என்று சொல்வது யார் மாணிக்கம் தாகூர்தான். அதேபோல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று யாராவது சொன்னால் இல்லை எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்வதும் மாணிக்கம் தாகூர்தான்.
ஆனால் அவர் ஒரு கருத்தைத் தெரிவித்தால், அதற்கு எதிராக செல்வப்பெருந்தகை தொடர்ந்து எதிர்க்கருத்துகளைப் பேசி வருகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு எதற்காக முன்னுக்குப் பின் முரணாகப் பேச வேண்டும்.
திருப்பரங்குன்றத்துக்கு மாணிக்கம் தாகூர் எத்தனை முறை சென்றிருக்கிறார் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி முருக பக்தர்களுக்கு தயவுசெய்து பாடம் எடுக்க வேண்டாம். எங்கள் முருகனை யார் வழிபட வேண்டும் எப்படி வழிபட வேண்டும் யார் காவடி எடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டாம்.
நான் ஒவ்வொரு ஆண்டும் பழனி முருகனுக்கு காவடி எடுப்பவன். அதனால் மாணிக்கம் தாகூர் என்னிடம் வந்து முருகப்பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்று பேச வேண்டாம். அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைந்து அந்தக் கருத்துகளைப் பேசட்டும். அப்போது நான் வேறு மாதிரியாகக் கருத்து தெரிவிக்கிறேன்’’ இவ்வாறு கூறினார்.
