காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததாலும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பல லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் கருகும் அபாயத்தில் உள்ளன. பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் அருகிலுள்ள குளங்கள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பாய்ச்சும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள், தற்போது சம்பா பயிர்களையும் இழக்கும் சூழலில் உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 7 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான சம்பா மற்றும் தாளடி பயிர்கள் போதிய நீரின்றி வாடி வருவதால், பல இடங்களில் விவசாயிகள் விலைக்குத் தண்ணீர் வாங்கிப் பயிர்களைக் காப்பாற்ற முயல்கின்றனர்.

கர்நாடகத்திடமிருந்து நிலுவையில் உள்ள சுமார் 11 டி.எம்.சி (TMC) காவிரி நீரைப் பெற்றுத் தரக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கர்நாடகாவிலும் வறட்சி நிலவுவதாகக் கூறி கூடுதல் நீர் திறக்க மறுக்கப்பட்டதால் டெல்டா விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

விளைந்த பயிரைக் கருகாமல் காப்பாற்றத் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம். இதைவிட ஒரு டெல்டா விவசாயிக்கு வேறென்ன கொடுமை வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.காவிரியில் 11 TMC பற்றாக்குறை நீரை பெற சரியான வாதங்களை எடுத்து வைக்கத் திறனில்லாத தவெக அரசின் இரண்டு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலும் தண்ணீர் இல்லை. பருவ மழையும் பெய்யவில்லை. இதைப் பற்றி அரசுக்கு கொஞ்சம் கூட அக்கறையும் இல்லை. இதனால் டெல்டாவில் சம்பா பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தனது எக்ஸ்தளப்பதில் வேதனை தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களை உடனடியாக வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, நிபுணர் குழுவை அனுப்பிப் பயிர் சேதங்களைக் கணக்கிட வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

வறட்சியால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு 40,000 ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளின் பயிர்க்கடன்கள் மற்றும் நிலவரிகளை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal