சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினே மீண்டும் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், இது தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் அறிவாலயத்தில் நடந்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கொளத்தூர் தவெக எம்எல்ஏவாக இருந்த வி.எஸ். பாபு உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். தமிழகத்தில் 6 சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. தொகுதியின் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மூலம் வேட்பாளர் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது.

வி.எஸ்.பாபு மருத்துவமனையில் இருந்தபோதே, கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்த பேச்சுகள் எழத் தொடங்கியது. கடந்த பொதுத்தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியடைந்தார். அதை தவெகவினர் கடுமையாக விமர்சித்தனர். முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில், அப்பாவை காணோம் என்று கூறினார். கொளத்தூரில் உங்கள் தலைவருக்கு கொத்து புரோட்டா போட்டுவிட்டோம் என்று தவெகவினர் கூறினார்கள்.

திமுக தரப்பில் அப்செட் ஆனார்கள். ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்ல சென்றபோது, சேகர்பாபு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அழுதார்கள். விஸ்.எஸ் பாபு இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இடைத்தேர்தலுக்கு பயந்து தவெகவினர் அவரை மருத்துவமனையிலேயே வைத்துள்ளனர் என திமுக கூறியது. பாபு இறந்ததும் கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திமுகவினர் விருப்பம் கூறி வருகிறார்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்காமல், பொறுமை காக்க திமுக முடிவு செய்துள்ளது. சொல்லப்போனால் இடைத்தேர்தலில் போட்டியிட ஸ்டாலின் விருப்பம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது. இப்போதைக்கு அவசரமில்லை தேர்தல் தேதி அறிவித்தால் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையில் உள்ளனர். இந்நிலையில் சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், மு.க. ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மிகவும் ரகசியமாக நடந்த இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, பொன்முடி, ஏ.வ வேலு, ராஜ கண்ணப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே இருந்தனர். தற்போதைய அரசியல் சூழல், தொகுதி நிலவரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது. வெற்றி பெற்றால் ஏற்படும் தாக்கம், மீண்டும் தோல்வியடைந்தால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இறுதி முடிவுகள் ஸ்டாலின் கையில் உள்ளது என்கிறார்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal