சென்னை கொளத்தூர் உள்பட 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பொங்கல் பண்டிகை முடிந்து நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்றவர் விஎஸ் பாபு. இவர் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான முக ஸ்டாலினை தோற்கடித்து வாகை சூடினார்.

இதனால் அதிக கவனம் பெற்றார். ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு விஎஸ் பாபு திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிககப்பட்டார். சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இன்று விஎஸ் பாபு காலமானார்.

இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில், ”விஎஸ் பாபு உடலநலக்குறைவால் செப்டம்பர் 9 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று மதியம் 2.24 மணிக்கு விஎஸ் பாபுவின் உயிர் பிரிந்தது. அவர் மாரடைப்பால் காலமானார்” என்று கூறப்பட்டுள்ளது. விஎஸ் பாபு மறைவால் கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

பொதுவாக ஒரு சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ மறைந்தால் அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அந்த வகையில் இன்று விஎஸ் பாபு இறந்தால் அடுத்த மே மாதத்துக்குள் கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

ஆனால் 2027 பிப்ரவரி மாதத்தில் கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் 2027 தொடக்கத்தில் பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒருமுறை இந்த மாநிலங்களுக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்தல் நடத்தப்படும். இதனால் 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் 2027 ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து பிப்ரவரி, மார்ச்சில் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

அதேபோல் நீதிமன்றத்தில் வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாமல் இருந்தால் சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியோடு சேர்த்து தமிழகத்தில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை, திருச்சி கிழக்கு உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அதே சமயம், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகள் விரும்புகிறார்கள். மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal