புதுக்கோட்டை, ஈரோட்டில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் பெருந்துறையிலும் இடமாற்றப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டையில் முதலமைச்சர் விஜய் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெறவுள்ளது. புதுக்கோட்டையில் அரசு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் வருவதையொட்டி 4,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து திங்கட்கிழமை காலை விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்கிறார். முதலமைச்சர் பயணிக்க கூடிய சாலை இடைத்தேர்தல் நடைபெற உள்ள விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு இருப்பதால், முதலமைச்சர் விஜய் சாலை வலம் மேற்கொண்டு மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர், பின்னர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு காணொளி காட்சி மூலமாக உள் விளையாட்டு அரங்கை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த இடம் தற்போது மாற்றப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடைசி நேரத்தில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

14 ஆயிரம் பேருக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், சுமார் இரண்டாயிரம் பயனாளிகள் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கு பெற்று நலத்திட்டங்களை பெற உள்ளனர். முதலமைச்சர் வருகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதலமைச்சர் பயணிக்க கூடிய சாலை உள்ளிட்ட 13 இடங்களில் செயல்படக்கூடிய மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு விழா நிகழ்வுகள் அனைத்தும் முடிந்ததும், விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்தும் முதலமைச்சர், பிற்பகல் 2.45 மணிக்குத் திருச்சி புறப்பட்டு அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

புதுக்கோட்டையை தொடர்ந்து ஈரோட்டிலும் முதலமைச்சர் விஜய் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியின் இடம் மாற்றப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பெருந்துறையில் தனியார் கல்லூரியில் நடைபெற இருந்த முதல்வர் நிகழ்ச்சி காஞ்சிகோயில் சாலையில் உள்ள தனியார் மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படவில்லை.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal