த.வெ.க.வுக்கு வருமாறு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ரகசியமாக பேரம் பேசும் தகவல் எடப்பாடிக்கு கசிந்த நிலையில், அவர்களை கட்சியிலுருந்து நீக்கலாமா என மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பில் தொடர்ச்சியாக அதிருப்தியில் இருந்து வருகிறது. தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் எடப்பாடி பழனிசாமி கொடுக்காததால், பல்வேறு மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கட்சி நடவடிக்கையில் இருந்து எடப்பாடி பழனிசாமி இருவரையும் ஒதுக்கி வைத்தார்.

அதேபோல் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் சில உள்ளடி வேலைகளை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. வன்னியர்கள் வாக்குகளை கைப்பற்ற சிவி சண்முகமும், கொங்கு வேளாளர் கவுண்டர் வாக்குகளை கைப்பற்ற எஸ்பி வேலுமணியும் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இருப்பினும் இந்த இடைத்தேர்தல் முடிவடைந்த பின் இருவருமே கொஞ்சம் அமைதி காத்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோரை கட்சியில் இருந்து நீக்கி அறிவித்தார். இதனிடையே இடைத்தேர்தல் தோல்வி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

அப்போது எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தேர்தலின் போது செய்த செயல்பாடுகள் குறித்து சில தகவல்கள் எடப்பாடி பழனிசாமி காதுகளுக்கு சென்றுள்ளன. வெளியில் அமைதி காப்பது போல் இருவரும் இருந்தாலும், உள்ளுக்குள் அதிமுக எம்எல்ஏ-க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் தெரிந்திருக்கிறது. இதனால் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, இப்படியே விட்டால் சூழல் இன்னும் மோசமாகிவிடும். கட்சியில் இருந்து நீக்கிவிடலாமா என்று ஆலோசனை செய்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி இப்படி வெளிப்படையாக ஒரு கருத்தை ஆலோசிப்பவர் அல்ல என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அப்படி ஆலோசித்தால், நிச்சயமாக அதுதொடர்பாக முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டுவிடுவார் என்றும் கூறுகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்குள் இருந்துகொண்டே இதே போல்தான் கலகம் விளைவித்தார். இதனால், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கும் அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal