தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் மோசடி நடந்ததாக கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியான நிலையில் சரணடைந்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மோசடி செய்த புகாரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஜூன் 27இல் வழக்குப்பதிவு செய்தது. வழக்கில் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட திமுக நிர்வாகியும், தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவருமான பி.டி. அரசகுமாரை அன்றைய தினமே சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
ஜூலை 11ஆம் தேதி, சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில், அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து ஜூலை 23இல், அரசகுமாருக்கு உடந்தையாக இருந்து பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்படும் அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ் என்ற ராஜா, சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் செப்டம்பர் 16ஆம் தேதி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பெயர் சேர்க்கப்பட்டது.
விசாரணையின் அடுத்தகட்டமாக, அன்றைய தினம் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 2 நாட்களுக்குப் பிறகு, அன்பில் மகேஷிடம் போலீசார் சுமார் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது தரப்பிலிருந்து ஆவணங்களும் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, செப்டம்பர் 30ஆம் தேதியன்று அரசகுமார் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கியது.
இதையடுத்து, தன் மீதான கைது நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் அன்பில் மகேஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்தார். அக்டோபர் 16ஆம் தேதி இந்த முன்ஜாமின் மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த சூழலில், முன்ஜாமின் மனு மீதான அடுத்தகட்ட விசாரணைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, அன்பில் மகேஸை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
சென்னையில் அவருக்கு தொடர்புடைய இரண்டு வீடுகள் மற்றும் ஓர் அலுவலகம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டன. அக்டோபர் 26, நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்பில் மகேஸுக்கு முன்ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான முக்கியக் காரணங்களை நீதிபதி பதிவு செய்தார். அதில், கட்சி நிதி என்ற பெயரில் பெரிய அளவில் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்தப் பணம் யாரை சென்றடைந்தது என்பதை அன்பில் மகேஸிடம் விசாரிக்காமல் கண்டறிய முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டது.
177 பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளியாக குறிப்பிடப்படும் முத்துக்குமார் தலைமறைவாக இருப்பதையும், அவரது உறவினர்கள் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலங்கள், அன்பில் மகேஸின் கட்டுப்பாட்டில் முத்துக்குமார் இருப்பதை காட்டுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், விசாரணைக்கு ஒத்துழைத்ததாக கூறி முன்ஜாமின் கோர முடியாது என்றும் அரசியல் செல்வாக்கு மிக்க முன்னாள் அமைச்சர் என்பதால் சாட்சிகள் அல்லது விசாரணையை பாதிக்கும் அபாயத்தையும் புறக்கணிக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டார். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார். காவல்துறையால் தேடப்பட்டு வந்த நிலையில் முத்துக்குமார் சரணடைந்திருக்கிறார். அன்பில் மகேஸ் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை இன்று நடக்கவுள்ள நிலையில் முத்துக்குமார் சரணடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முத்துக்குமார் தலைமறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி அன்பில் மகேஸுக்கு முன்ஜாமீன் அளிக்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
