பண மோசடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தி.மு.க. தலைமை கைவிட்டுவிட்டது என தகவல்கள் பரவிவந்த நிலையில், சிறையில் உள்ள நண்பனை பார்க்க ஓடோடிச் சென்றிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி பணம் வசூலித்து மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் நேற்று (அக்டோபர் 26) தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷை போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷ், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அன்பில் மகேஷின் கைது சட்டவிரோதமானது என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அரசு தரப்பில், அன்பில் மகேஷை விசாரணை செய்ய வேண்டியது கட்டாயம் என வாதிடப்பட்டது.
இதையடுத்து அன்பில் மகேஷை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சத்தியமூர்த்தி உத்தரவிட்டார். இதனையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
இந்த நிலையில், புழல் சிறைக்கு நேரில் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷை நேரில் சந்தித்து பேசினார். உடன், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர். முன்னதாக அன்பில் மகேஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
