தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 13 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கண்டமனூர் அருகே உள்ள தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு ஒரே அறையில் விழுப்புரத்தைச் சேர்ந்த லிங்கம், ராஜா சிக்கந்தர், கருப்பசாமி, சிலம்பரசன், திருப்பதி, மீனாட்சி சுந்தரம், சபரி உள்ளிட்ட 17 விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி சிறை வார்டனை அழைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறைக் காவலர் தங்கப்பாண்டி உள்ளிட்ட இரண்டு காவலர்கள் சிறையின் அறை கதவைத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்த மற்ற கைதிகள் திடீரென அவர்களை கடுமையாக தாக்கினர்.
பின்பு அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர். இதில் காவலர் தங்கப்பாண்டிக்கு தலையில் பலத்த காயமும், மற்ற இவருக்கும் லேசான காயமும் ஏற்பட்டது. இவர்களுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கைதிகள் தப்பிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் நேரில் சென்று சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து தென்மண்டல காவல்துறைத் தலைவர் விஜயேந்திர பிடாரி சிறைக்கு வந்து ஆய்வு நடத்தினார்.
சிறைச்சாலையைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேனி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் பணியை மும்முரப்படுத்தியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

சிறைச்சாலை பகுதியைச் சுற்றிலும் உள்ள வயல், மலைப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது தப்பியோடிய கைதிகளில் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து இவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து நள்ளிரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தப்பியோடியவர்களில் பலர் மதுரை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என வெளியாகியுள்ள தகவலையடுத்து, அந்த மாவட்டங்களிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.மாவட்ட சிறைச்சாலையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி 17 சிறைக் கைதிகள் தப்பி உள்ள சம்பவம் சிறையில் உள்ள கைதிகள் மற்றும் போலீஸாரின் பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில், “கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனங்கள்
தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று இரவு சுமார் 17 கைதிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக நாடகமாடி, சிறைக் காவலர்களைத் தாக்கி தப்பிச் சென்றதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது!
சினிமாவையே மிஞ்சும் இந்தச் சம்பவம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் தவெக அரசு எந்த அளவுக்குத் தோல்வியடைந்திருக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. காவல்துறை வெளியில் இருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதில் தான் அலட்சியம் காட்டுகிறது என்றால் சிறைக்குள் இருக்கும் கைதிகளைக் கண்காணிப்பதிலும் படுதோல்வி அடைந்திருக்கிறது.
இத்தனை காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தும் சுமார் 17 கைதிகள் தப்பிச் செல்லும் அளவுக்கு சிறைத் துறையின் பாதுகாப்பு சீர்குலைந்திருப்பது கேள்விக் குறியாகியுள்ளது. தொடர்ந்து தமிழக மக்களின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கையும் உறுதிசெய்ய தவறி வரும் தவெக அரசு, தனது நிர்வாகத் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும்!
தப்பியோடிய கைதிகள் அனைவரையும் உடனடியாக மீண்டும் கைது செய்து, இந்தப் பாதுகாப்புக் குளறுபடிக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் சிறைகளில் கூடுதல் பாதுகாப்பினைத் தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
