Party Fund File எங்கே என கேட்டுக்கொண்டிருந்தனர். ஒரே ஒரு File-ஐ திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைதாகியிருக்கிறார் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, டிடிசிபி அனுமதி உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் பணம் வசூலித்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய பி.டி. அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

விசாரணையின் தொடர்ச்சியாக, பல்வேறு நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆவணங்கள், மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தவழக்கில், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. இந்தவழக்கை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், அவரது முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை அவரை மாலை 4 மணியளவில் சென்னை அமைந்தகரையில் வைத்து கைது செய்தது. இதைத்தொடர்ந்து, நவம்பர் 6-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அன்பில் மகேஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தச்சூழலில் தான், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், ”அன்பில் மகேஸ் பணம் வசூலித்திருக்கிறார். அதற்கான ஆதாரம் இருக்கிறது என நீதிமன்றத்தில் வாதம் நடந்திருக்கிறது. நூற்றுக்கணக்கான பள்ளிகளை மிரட்டி கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். அன்பில் மகேஸை ரிமாண்ட் செய்யாமல் மற்றவர்கள் எப்படி தைரியமாக வந்து புகார் அளிப்பார்கள்? திமுக ஆட்சியில் யாரெல்லாம் சாட்சி சொல்ல வந்தார்களோ அவர்கள் நிலைமை என்ன ஆனது என எல்லோருக்கும் தெரியும்.
திமுகவினர் Party Fund File எங்கே என கேட்டுக்கொண்டிருந்தனர். ஒரே ஒரு File-ஐ திறந்ததற்கே முன்னாள் அமைச்சர், அதுவும் Party Fund-ல் 400 கோடிக்கு மேல் வசூலித்த முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது திமுகவிற்கு மிகப்பெரிய அவமானம். மற்ற ஃபைல்களும் திறக்கப்படவுள்ளது. குற்றம் செய்தது யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
