நீலகிரி மாவட்டம், பரலியார் மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து பயணிகளின் உயிரைப் பாதுகாப்பாக காப்பாற்றிவிட்டு, அரசுப் பேருந்தைக் காக்கப் போராடிய ஓட்டுநர் ஜனகராஜ் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், தூரட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனகராஜ். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த 23ஆம் தேதி இரவு குன்னூரில் இருந்து கோவைக்கு அரசுப் பேருந்தை இயக்கிச் சென்றுள்ளார். பேருந்தில் நடத்துநர் கேசவன் மற்றும் பயணிகள் இருந்தனர்.
கொட்டித் தீர்த்த கனமழையால் சாலை தெரியாத சூழலில், பர்லியார் அருகே பேருந்து திடீரெனப் பழுதாகி நின்றது. நள்ளிரவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் கொட்டும் மழையிலும் சற்றும் பதற்றமடையாத ஜனகராஜ், பயணிகளை மாற்றுப் பேருந்தில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.
அரசின் சொத்தான பேருந்தை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல் நடத்துநருடன் அதை மீட்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மலையின் மேல் பகுதியில் இருந்து பெரும் பாறை மண்களுடன் சரிந்து விழுந்ததோடு, ராட்சத மரங்களும் பேருந்தின் மீது முறிந்து விழுந்தன. இதில் பேருந்து அப்பளம்போல் நொறுங்கியது.
மழை மற்றும் மண் சரிவு காரணமாக மீட்புப் பணி தாமதமான நிலையில், மறுநாள் காலை மீட்புக் குழுவினர் மீட்புப் பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, ஓட்டுநர் இருக்கையில் பேருந்தின் கம்பிகளை இறுக்கிப் பிடித்தபடியே உயிரற்ற நிலையில் கிடந்த ஜனகராஜின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் இருந்து நடத்துநர் கேசவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
தான் படித்து ஆசிரியராக உயர்ந்ததற்குத் தனது தந்தையே காரணம் என்று கூறிய ஜனகராஜின் மகன், தந்தையின் இழப்பைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத காட்சி பார்ப்போரை கலங்க வைத்தது. பணிமனையில் அனைவரிடமும் அன்பாகப் பழகி வழிகாட்டியாக இருந்த ஜனகராஜின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக வேலைவாய்ப்பும் நிவாரணமும் வழங்க வேண்டும் என சக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைப்பாதையில் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படும் பகுதிகளை அகலப்படுத்தி, தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தன் கடமையே கண்ணாக வாழ்ந்து உயிர்நீத்த ஓட்டுநர் ஜனகராஜின் இந்த தியாகம், பரலியார் மலைப்பாதையைக் கடக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் என்றும் நிலைத்து நிற்கும்.
