மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அன்றிலிருந்து இன்றுவரை ஸ்ரீரங்கம் தொகுதிக்கு தனி மவுசுதான். அதே போல், திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்திருக்கிறார். இந்தத் தொகுதியில் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை போட்டியிட வைக்கும் முயற்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள ஏழு தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அதில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு சாதகமாகவே, அதிமுகவில் வெற்றி பெற்ற ஐந்து எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழல் இருப்பதாக தெரிகிறது. திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீபத்தில் ஆய்வு செய்தது குறிப்பிடத் தக்கது.

இதுபற்றி அறிவாலயம் வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், மதுராந்தகம் தொகுதிக்கு எ.வ.வேலுவும், தாராபுரம் தொகுதிக்கு கே.என்.நேருவும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர். அ.தி.மு.க.வின் கோட்டையான கொங்குமண்டலத்தில் உள்ள தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க.வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, த.வெ.க.வையும் தண்ணீ குடிக்க வைத்தார் கே.என்நேரு. மிகவும் (9 ஆயிரம்) சொற்பவாக்குகள் வித்தியாசத்தில்தான் த.வெ.க. வெற்றி பெற்றது.
அதாவது, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான இடைத்தேர்தலிலேயே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிட போவதில்லை என்றும் மனநிலையில் இருந்ததார். ஏனெனில் சட்டசபை தேர்தல் தோல்வி, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்றது உள்ளிட்டவை திமுகவிற்குப் பெரும் சோதனையாக அமைந்தது. இடைத்தேர்தல்களில் வழக்கமாக ஆளுங்கட்சியே வெற்றி பெறும் என்ற சூழலில், தாங்கள் போட்டியிட்டுத் தோல்வியடைந்தால் அது மேலும் விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகும் என்பதால், இடைத்தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்ற யோசனையில் மு.க.ஸ்டாலின் இருந்ததாகக் கூறப்பட்டது.
இதற்கு திமுக தரப்பில் அனைவரும் ஏற்றுக் கொண்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை.எதிர்க்கட்சியாக இருக்கும்போது போட்டியிடாமல் பின்வாங்கினால் அது பலவீனமாகக் கருதப்படும் என்றும், எதிர்காலத்தில் கட்சிக்கு அது பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். உதயநிதியின் வற்புறுத்தலால் கடைசி நேரத்தில் போட்டியிட ஒப்புக்கொண்ட ஸ்டாலின்.
இடைத்தேர்தலில் கனிமொழி, உதயநிதிஸ்டாலின், கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் களத்தில் தீவிரமாகப் பணியாற்றினர். குறிப்பாக 2 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வாக்குவங்கி 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் ஓட்டு வங்கி அதிகரித்து மூன்றாவது இடத்திலிருந்து திமுக இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த எழுச்சி கட்சித் தொண்டர்களுக்குப் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாகத் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு மு.க.ஸ்டாலினை வெற்றி பெறச் செய்து மீண்டும் சட்டப்பேரவைக்கு அழைத்துவர வேண்டும் என கே.என்.நேரு ஆர்வம் காட்டி வருகின்றனர். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மு.க.ஸ்டாலின் தொண்டர்களின் உத்வேகத்திற்காகவும், எதிர்ப்பாளர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கவும் அவரை மீண்டும் களமிறக்க வேண்டும் என்பதே கே.என்.நேருவுன் எண்ணமாக உள்ளது. குறிப்பாகத் திருச்சி கிழக்கு தொகுதி திமுகவின் பலமான கோட்டையாகவும், தமிழ்நாட்டின் மையப்பகுதியாகவும் விளங்குவதால், இந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டால் பொருத்தமாக இருக்கும்’’ என்றனர்.
இரண்டு தொகுதி இடைத்தேர்தலின் முடிவுகள் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின், ‘தி.மு.க.வுக்கு தோல்வியில் வெற்றி… த.வெ.க.வுக்கு வெற்றியில் தோல்வி’ என்று பேசியதையும் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.
த.வெ.க.வினரோ, ‘‘ திருச்சி கிழக்கு தொகுதி என்பது விஜய் வெற்றி பெற்ற ஒரு முக்கிய பகுதியாகும். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது என்றாலும், விஜயின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களை முறியடிக்கத் தவெக தீவிரமாக முயன்று வருகிறது. இந்தத் தொகுதியை விட்டுக்கொடுக்காமல் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தவெக உறுதியாக உள்ளது’’ என்றனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக மற்றும் தவெக இடையேயான போட்டி தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது.
