முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழ்நாட்டுக்கு புதிதாக தலைமை செயலகம் கட்டுவதாக அறிவித்தது. சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதாக கூறியது. ஆனால் இந்த திட்டத்திற்கு மீனவ மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மாற்று இடத்தை ஆய்வு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதுள்ள தலைமை செயலக கட்டடத்தில் இடம் பற்றாக்குறை இருக்கிறது, இந்த கட்டடத்தில் புதிதாக விரிவாக்க பணிகள் மேற்கொள்ள முடியாது என்பதால் புதிதாக தலைமை செயலகம் கட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதாக அரசு கூறுகிறது. முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் இதனை அறிவித்து, 1,200 கோடி ரூபாய் செலவில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக பட்டினப்பாக்கம் பொருத்தமாக இருக்கும் என கூறி அங்கே பணிகள் தொடங்கின. ஆனால் இந்த அறிவிப்பு அங்கே வசிக்கும் மீனவ மக்கள் மத்தியில் பெரும் போராட்டங்களை தூண்டியது. இவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் குரல் கொடுத்தார்.
இந்த சூழலில் அரசு மாற்று இடமாக தீவுத்திடலில் உள்ள பல்லவன் இல்லம் அமைந்துள்ள 13.22 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாநகர போக்குவரத்து கழக வளாகத்தை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தற்போது இந்த வளாகத்தில்தான் மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் தலைமையகங்கள் இயங்கி வருகின்றன, இரண்டு எம்.டி.சி பேருந்து பணிமனைகளும் செயல்பட்டு வருகின்றன.
எம்.டி.சி வளாகம் பரிசீலனையில் உள்ள முக்கிய இடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும், எனினும் இதுகுறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமை செயலக வளாகம் எங்கு அமையும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்லவன் இல்ல வளாகத்தில் கட்டிடங்களுடன் கூடிய சுமார் 13.22 ஏக்கர் நிலம் உள்ளது. இது புதிய தலைமை செயலக வளாகத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மேலும், தலைமை செயலக ஊழியர்கள் பேருந்து, புறநகர் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் மூலமாக எளிதாக வந்து செல்ல முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பல்லவன் இல்ல வளாகத்தை அரசு தேர்வு செய்வதில் இரண்டு முக்கிய நன்மைகள் உள்ளன. இந்த நிலம் ஏற்கனவே அரசுக்கு சொந்தமானது என்பதால், புதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதனால் மக்களை அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளும், தவிர்க்கப்படும்.தலைமை செயலகத்தில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களுக்கும், நிர்வாக மையத்திற்கு வரவிருக்கும் பொதுமக்களுக்கும் அன்றாட போக்குவரத்து மற்றும் பயண வசதிகள் எளிதாக அமையும்.
பல்லவன் இல்ல வளாகம் தலைமை செயலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், போக்குவரத்து கழகங்களின் தலைமையகத்தை மாற்றுவதற்காக மாற்று இடத்தை அரசு கண்டறிய வேண்டியிருக்கும். இது தொடர்பாக, கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தை தலைமையகத்தை மாற்றுவதற்கு பரிசீலிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
