சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் இடத்தை நோக்கி நகர்ந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் அடங்கிய சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்தனர். இதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணி, அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்தாலும், தொடர்ந்து அதிருப்தியில் இருந்துவருவதாகவே சொல்லப்படுகிறது.
அதேசயம், சி.வி. சண்முகம் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தியில் இருந்துவருகிறார். இதற்கிடையில் இரண்டு தொகுதிகள் இடைத் தேர்தலிலும், அதிமுக வென்ற இடத்திலேயே மூன்றாம் இடத்தை அடைந்த நிலையில் மீண்டும் அதிருப்தி அணியின் ஆலோசனைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில் நேற்றும்கூட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னையில் உள்ள அவரது எம்.ஆர்.சி. நகர் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இடைத்தேர்தலில் அதிமுக மோசமான தோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கான காரணத்தை கலந்து ஆலோசித்து சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகத்தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என சொல்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சி.வி. சண்முகம் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் மயிலம் தொகுதிக்குட்பட்ட அதிமுகவின் ஒன்றிய, நகர, கிளை, அணிச் செயலாளர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோரின் கட்சி பொறுப்புகளை பறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே மாவட்டச் செயலாளர் மற்றும் அமைப்புச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து சி.வி. சண்முகத்தை நீக்கியிருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அவரது தீவிர ஆதரவாளர்களான நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருப்பது பெரும் கவனம் பெற்றுள்ளது.
