தமிழகத்தில் ‘கவர்ச்சி அரசியலின்’ மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலைவாசி விண்ணைத் தொட்ட நிலையிலும், மதுராந்தகம், தாராபுடம் இடைத்தேர்தலில் வேட்பாளர்களுக்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு நிலவியபோதும், த.வெ.க. வெற்றி பெற்றதுதான் வியப்பின் உச்சம்!
தமிழகத்தைப் பொறுத்தவரை நடிகர்கள் மீதான கவர்ச்சி மக்களிடையே அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. நடிகர் தனுஷ் ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை பதிவு செய்திருக்கிறார். முதல்வர் விஜய்யின் பாணியை அப்படியே கையில் எடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். விஜய் சேதுபதியும் அரசியல் விமர்சனங்களை அவ்வப்போது வைத்து வருகிறார்.
இந்த நிலையில்தான், சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெற தவறியதைத் தொடர்ந்து, தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
இதற்கிடையே, மத்திய அமைச்சர் எல்.முருகன் பதவியை ராஜினாமா செய்ததால் அவர் மீண்டும் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சுகள் அடிபட்டாலும், பாஜகவில் ஏற்கெனவே மாநிலத் தலைவராகப் பணியாற்றியவர்களை மீண்டும் அதே பதவியில் அமர்த்துவது இல்லை என்பதால், புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
அந்த வகையில், நடிகர் சரத்குமார், முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் தீவிரப் பரிசீலனையில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், வானதி சீனிவாசன் ஆந்திர மாநிலத்தின் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், ஒரு மாநிலத்துக்குப் பொறுப்பில் உள்ளவர் மற்றொரு மாநிலத்தின் தலைவராக நியமிக்கப்படமாட்டார்.
எனவே, தமிழக பா.ஜ.க. தலைவராக நடிகர் சரத்குமார் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிகிறது! இவரது மனைவியும், நடிகையுமான ராதிகா நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது!
