‘அ.தி.மு.க.வில் இருந்து இன்னும் 15 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் மேடையிலேயே பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், மீண்டும் த.வெ.க. குதிரை பேரம் பேச இருப்பதாக ஆளுநரிடம் அ.தி.மு.க. புகார் அளித்திருக்கிறது.

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். இதில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகிய இருவரும் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுளளனர்.

இதைத் தொடர்ந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வரத் தயாராக இருப்பதாக தவெக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். செங்கோட்டையனின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தவெகவில் குதிரை பேரம் நடப்பதாக அதிமுக சார்பில் ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியது குறித்து புகார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்திவிட்டு, இன்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தனபால் உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “அதிமுக சார்பில், தமிழ்நாடு ஆளுநர் அர்லேகருக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தோம். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவையும் ஆளுநரிடம் அளித்துள்ளோம்.

ஏற்கனவே அதிமுகவின் 6 எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் மூலம் விலை பேசி பல கோடி ரூபாய்க்கு வாங்கி இடைத்தேர்தலைக் கொண்டு வந்தது தவெக அரசு. தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டிருக்கிறது. தவெக அரசின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன், விரைவில் அதிமுகவின் 15 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு வருவார்கள் எனப் பேசியுள்ளார். அப்படியென்றால் குதிரை பேரம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. செங்கோட்டையன் பேச்சு குறித்த விவரங்களை ஆளுநரிடம் கொடுத்து, குதிரை பேரம் செய்யும் அமைச்சர்கள் மீதும், அரசு மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடிதம் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal