தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அவ்வப்போது அரசியல் சார்ந்த விமர்சனங்களை தனது வலைதளப்பக்கத்தில் பதிவிடுவார். இந்தக் கருத்துக்கள் அரசியலைத் தாண்டி யதார்த்தமாக சிந்திக்கக்கூடிய வகையில் இருக்கும்.

அந்த வகையில்தான் இன்று ‘கலாமுக்கு சலாம்’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ் பதிவிட்டிருக்கும் கருத்து, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

அவரது வலைதளப்பக்கத்தில்,

‘‘#கலாமுக்குசலாம்’’ எனும் தலைப்பில்,

‘‘சேதுக் கரையில்
உதித்த
தமிழன்…

ஷில்லாங்கில்
மரித்த
புனிதன்…

தென்கோடி
கடற்கரையில்
ஐனனம்…

தேசியக் கொடி
போர்த்திய
சந்தனப்
பேழையில்
பயணம்…

நீர் சூழ்ந்த
கர்ப்பப்பையில்
வந்த
நெருப்புக்
கோளம்…

வானம்பார்த்த
பூமியில்
வந்துதித்த
ஞானக்
குழந்தை…

திண்ணைக்
கூடத்து
பள்ளிப்
படிப்பிலும்
விண்ணைத்
தொட்ட
வெற்றித் திருமகன்…

சேதுபதிசீமை
கண்டெடுத்த
சிப்பிக்குள் முத்து…

இந்நாட்டு
அறிவியலை
தென்னாட்டு
பக்கம்
திருப்பிக்
காட்டிய
திறமைகளின்
கெத்து…

வறண்டமண்ணில்
வந்துதித்த
ஏவுகணை
தமிழன்…

அகண்ட
விஞ்ஞானத்தின்
ஆழம்பார்த்த
எளிமையின்
புதல்வன்…

அணுவைத்
துளைத்த
கையோடு
குறுகத்தரித்த
குறளையும்
பொழுதெல்லாம்
பாடிக்களித்த
பொக்ரான் புலவன்…

அணுவிஞ்ஞானம்
ஆன்மீக
மெய்ஞானம்

இரண்டும்
கலந்த
அறிவியல்
தமிழால்
பார்வியக்க
வைத்த
பாரதரத்னா…

நபிவழி நடந்து
நடராஜர்
பெருமையும்
அறிந்து..

குரானும்
குறளும்
பைபிளும் என
சகலமும்
நேசித்த
சமத்துவ
விஞ்ஞானி…

மெழுகுவர்த்தி
கையில் ஏந்தி.
குங்குமம் இட்டு
குத்துவிளக்கு
ஏற்றி

அகிலம்
அதிசயித்த
அப்துல்கலாம்…

ஆதலாலே
மதங்களை
கடந்து
மனிதகுலம் வைக்கிறது
அவருக்கு
அன்புச்சலாம்

மருது’’ என பதிவிட்டிருக்கிறார்.

மறைந்தும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்துல் கலாமுக்கும், இப்படியொரு சலாம் யாரும் வைக்க முடியாது என்பதுதானே உண்மை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal