பெருந்துறை சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கு தடை கேட்டு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். தோப்பு வெங்கடாச்சலம் தொடுத்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றதில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதனால் இடைத்தேர்தல் இப்போதைக்கு நடக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் எஸ். ஜெயகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டு குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்த தி.மு.க.வின் அப்போதைய (தற்போது விலகிவிட்டார்) மாவட்டச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், தொகுதியில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோப்பு வெங்கடாசலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 84-ன் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
சட்டப்படி ஒரு தொகுதி காலியானால் 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 151-ஏ). ஆனால், இந்த ஐந்து தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலை எதிர்த்து, தோற்ற வேட்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தாக்கல் செய்த பதில் மனுவில் முக்கிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை (1967 சஞ்சீவய்யா வழக்கு மற்றும் 2010 தெலங்கானா ராஷ்டிர சமிதி வழக்கு) சுட்டிக்காட்டிய தேர்தல் ஆணையம், ‘‘ஒரு தொகுதியில் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு நிலுவையில் இருக்கும்போதும், மனுதாரரே தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரும்போதும், இடைத்தேர்தல் நடத்தினால் ஒரே பதவிக்கு இரண்டு பேர் உரிமை கோரும் சிக்கல் உருவாகும்’’ என விளக்கியது. இதன் காரணமாக, நீதிமன்றத்தில் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை ஏற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடையையும் நீட்டித்திருந்தது.
இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஐந்து தொகுதிகளில், முதலாவதாக பெருந்துறை தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கில் தற்போது தீர்ப்பு வந்தது. தோப்பு வெங்கடாசலத்தின் மனுவை நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முழுமையாக நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளார். பெருந்துறை தொகுதிக்கான வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதால், அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கு சட்டரீதியாக இருந்த முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. இதனால் பெருந்துறை தொகுதிக்கு தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்திருந்தது.
இந்த நிலையில்தான் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தோப்பு வெங்கடாச்சலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். இவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பான விசாரணை தேதியை விரைவில் அறிவிக்க இருக்கிறது.
தி.மு.க.வில் இருந்து தோப்பு வெங்கடாச்சலம் விலகிய நிலையில், மற்ற தி.மு.க. வேட்பாளர்களைவிட முந்திக்கொண்டு உச்சநீதிமன்றம் சென்று, தனிப்பட்ட முறையில் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!
ஐந்து தொகுதி சட்டமன்றத் இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் உச்சநீதிமன்றம் சென்றிருப்பதால், இப்போதைக்கு இடைத்தேர்தல் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது!
