‘இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும்’ என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் தவெக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுகவுக்கு ஆதவளிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சற்றுமுன் தெரிவித்தார். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, இடைத்தேர்தலிலும் கூட்டணி சேர்ந்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “தமிழக இடைத் தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக ஆதரவு அளிக்கும். ஏற்கனவே இது பற்றி அண்ணன் ஸ்டாலின் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் உரையாடினார். அப்போதே நான் இந்த இடைத்தேர்தல் மட்டுமல்ல, அடுத்து வர இருக்கும் இடைத்தேர்தலுக்கும் ஆதரவு கொடுப்போம் எனத் தெரிவித்தேன்.
திமுக வேட்பாளர்கள் என்னை நேரில் வந்து சந்தித்து ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்தனர். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தேமுதிக, திமுகவிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவாக இருக்கும். திமுக வேட்பாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். திமுக வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரச்சாரத்திலும் ஈடுபடுவேன்.
வருகின்ற செப்டம்பர் 16-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன” என அவர் தெரிவித்தார்.
