கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘தமிழக அரசியல்’ வார இதழில் ‘கைவிடும் கம்யூனிஸ்டுகள்? காத்திருக்கும் சவால்கள்!’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான், ​தா​ராபுரம், மது​ராந்​தகம் இடைத்​தேர்​தலில் இடது​சா​ரி​கள் கூட்​டணி தனித்து களம் காண்​ப​தாக கம்யூனிஸ்ட் கட்​சி​யின் தலை​வர்​கள் அறி​வித்​துள்​ளனர்.

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எந்​தவொரு கட்​சிக்​கும் தனிப் பெரும்​பான்மை கிடைக்​காத நிலை​யில், காங்​கிரஸ், விசிக, இடது​சா​ரி​கள் உள்​ளிட்ட கட்​சிகளின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​தது. தொடர்ந்து காங்​கிரஸ், விசிக, ஐயுஎம்​எல் கட்​சிகள் அமைச்​சர​வை​யில் இடம்​பெற்ற நிலை​யில், கொள்கை அடிப்​படை​யில் அமைச்​சர​வை​யிலோ அல்​லது கூட்​ட​ணி​களிலோ இடது​சா​ரி​கள் இணை​யாமல், வெளி​யில் இருந்து மட்​டுமே ஆதரவு அளித்து வந்​தனர். கூட்​ட​ணி தொடர்பாக இரண்டு ஆலோசனைக் கூட்டங்களையும் இரண்டு கம்யூனிஸ்டுகளும் புறக்கணித்து வந்தன.

இதற்​கிடையே, முதல்​வர் போட்​டி​யிட்ட இரு தொகு​தி​களில் ஒரு தொகு​தியை ராஜி​னாமா செய்​தது, அதி​முக எம்​எல்​ஏக்​கள் ராஜி​னாமா செய்​து​விட்டு ஆளுங்​கட்​சி​யில் இணைந்​தது என தமிழக சட்​டப்​பேர​வை​யில் 7 தொகு​தி​கள் காலி​யாகின. இதில் 5 தொகு​தி​களுக்கு எதி​ராக வழக்கு தொடரப்​பட்​டு, இடைத்​தேர்​தல் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், தாராபுரம் மற்​றும் மது​ராந்​தகம் தொகு​தி​களுக்கு மட்​டும் தற்​போது தேர்​தல் (அக்​டோபர் 6) அறிவிக்​கப்​பட்​டது.

பிர​தான கட்​சிகளான தவெக, திமுக, அதி​முக ஆகியவை வேட்​பாளர்​களை அறி​வித்​துள்ள நிலை​யில், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இடைத்​தேர்​தலில் யாருக்​கு ஆதரவு அளிக்​கும் என்​பது கேள்விக்​குறி​யாக இருந்து வந்​தது. இந்​நிலை​யில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தலை​மை​யில் மாநில நிர்​வாகக் குழு கூட்​டம், சென்னை தி.நகரிலும், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தலை​மை​யில் மாநிலக் குழு கூட்​டம், திருச்சி​யிலும் நேற்று நடை​பெற்​றன.

கூட்​டத்​தின் முடி​வில் எந்த கூட்​டணி வேட்​பாளர்​களுக்கும் ஆதரவு அளிக்​காமல், இடைத்​தேர்​தலில் இடது​சாரி கட்​சிகள் தனித்​துப் போட்​டி​யிட முடி​வெடுத்​துள்​ள​தாக அறி​வித்​துள்​ளன. இதுதொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் பேசிய மு.வீர​பாண்​டியன், “இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி தற்​போது எந்த கூட்​ட​ணி​யிலும் இல்​லை. பாஜக​வின் மறை​முக ஆட்சி வந்​து​விடக் கூடாது என்​ப​தற்​காகவே தவெக அரசுக்கு வெளி​யில் இருந்து ஆதரவு அளித்தோம்.

தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்ள இடைத்​தேர்​தல் மக்​கள் மீது திணிக்​கப்​பட்ட ஒன்​று. எனவே, எந்​தக் கூட்​ட​ணி​யிலும் இணை​யாமல் தேர்​தலை இடது​சா​ரி​கள் தனித்து எதிர்​கொள்ள முடிவு செய்​துள்​ளோம். தாராபுரத்​தில் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யும், மது​ராந்​தகத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யும் போட்​டி​யிடும். வேட்​பாளர்​கள் சென்​னை​யில் செப்.15ம் தேதி முறைப்​படி அறி​முகப்​படுத்​தப்​படு​வர். அதே​நேரம் அரசுக்​கான எங்​களது வெளி ஆதரவு தொடரும். இன்​றைய சூழலில் மாணவர்​கள், இளைஞர்​கள் மத்​தி​யில் இடது​சா​ரி​களுக்கு ஒரு இடம் இருக்​கிறது என்று திட​மாக நம்​பு​கிறோம். அவர்​கள் நிச்​ச​யம் எங்​களுக்கு வாக்​களிப்​பார்​கள்.” என்​றார்.

தொடர்ந்து பெ.சண்​முகம் பேசுகையில், “வெற்​றி​பெற்ற 20 நாட்​களி​லேயே அதி​முக எம்​எல்​ஏக்​கள் பதவி விலகி ஆளுங்​கட்​சி​யில் இணைந்​தது ஆரோக்​கியமற்ற அரசி​யலுக்கு வழி​வகுக்​கும் செய​லாகும். தவெக ஆட்​சி​யமைத்து 120 நாட்​கள் நிறைவடைந்​துள்ள நிலை​யில், சட்​டப்​பேர​வை​யில் நிகழ்ந்த நிகழ்​வு​கள், பட்​ஜெட்​டில் நவீன தாராளமய பொருளா​தா​ரக் கொள்​கைகளை அமல்​படுத்​தக்​கூடிய அம்​சங்​கள் இடம்​பெற்​றிருந்​தது உள்​ளிட்ட பல்​வேறு அரசு நடவடிக்​கை​களில் நாங்​கள் மாறு​பட்​டிருக்​கிறோம். அதுகுறித்து வலி​யுறுத்​தி​யும் பலவற்றை அவர்​கள் ஏற்​றுக்​கொள்​ள​வில்​லை.
அதே​போல் தி​முக, அதி​முக என எந்த அணி​களி​லும் நாங்​கள் இல்​லை. ஆகவே, இந்த இடைத்​தேர்​தலில் இடது​சா​ரி​களின் சார்​பில் வேட்​பாளர்​களை நிறுத்​து​வது என தீர்​மானித்​து இருக்​கிறோம்​.” என்று தெரிவித்​தார்​.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசியபோது, ‘‘சார், த.வெ.க. ஆட்சி அமைந்ததற்கு முழுமுதற் காரணம் இரண்டு கம்யூனிஸ்டுகள்தான். ‘எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது’ என முதலில் தைரியமாக எதிர்ப்பு தெரிவித்தது இவர்கள்தான்.

இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் இந்நேரம் தி.மு.க.வின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகியிருப்பார். முதலில் கம்யூனிஸ்டுகள் எதிர்த்ததும், காங்கிரஸ் உடனடியாக சென்று த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்தது. அதன் பிறகுதான் மற்ற தி.மு.க. கூட்டணிக்கட்சிகள் ஆதரவு கொடுத்தன. தற்போது த.வெ.க.வின் சட்டமன்ற செயல்பாடுகள்… முதல்வரின் லண்டன் விசிட்… புதிய தலைமைச் செயலகம்… மிசா விவகாரம் குறித்து ஸ்டாலினை தொடர்ந்து அவதூறாக பேசி வருவது… உள்ளிட்டவை த.வெ.க. மீதான அதிருப்தியை கம்யூனிஸ்டுகளுக்கு அதிகப்படுத்தியிருக்கிறது. இதனால்தான் தனித்துப் போட்டி என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில் தி.மு.க. இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal