தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் விஜய் மோசமான உடல் மொழியுடன் பேசியதாக கூறி, அதனை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தி.மு.க. தலைவர்கள் பேசிய பேச்சு அச்சில் ஏற்ற முடியாத வகையில் அமைந்தது.
இந்த நிலையில்தான் ‘‘மேடை போட்டு என்னையும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா?” என முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘‘மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா ஸ்டாலின்?
நேற்று ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள் ஸ்டாலின்? எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு. தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா ஸ்டாலின்? திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர்.
அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா ஸ்டாலின்? குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.
நீங்கள் திருந்துவதற்கு வாய்ப்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
