த.வெ.க. ஆட்சிக்கு ஆறு மாதம் கெடுவிதித்தார் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், அந்த ஆறு மாதத்திற்குள் தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை த.வெ.க. அரசு சிறையில் தள்ள முயற்சித்து வருகிறது. அதற்குள் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

த.வெ.க. ஆட்சியமைத்து முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் ‘‘பதில் சொல்லாமல் ஊமையாக இருந்துட்டுபோக நான் இங்கே வரவில்லை’’ என கொங்கு மண்டல அமைச்சர் கோபமாக பேசினார். அவர் இப்படிப் பேசி யாருமே பார்த்ததில்லை. காரணம், அந்தளவிற்கு அவருக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

மின் கட்டண உயர்வு குறித்து கேள்வி கேட்டால், ‘கரூர் கம்பெனி’ என திசை திருப்புகிறார் த.வெ.க. அமைச்சர். அப்படி திசை திருப்பவதோடு, தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது நேரடியாக குற்றம் சாட்டுகின்றனர். நிதித்துறை அமைச்சர், ‘நான் தி.நகரில் லஞ்சம் கொடுத்தேன். அதற்கு நானே சாட்சி… நானே ஆதாரம்’ என ஆணித்தரமாக பேசினார். இதனால் ஆவேசமான முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், ‘நிதியமைச்சரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும்’ என சீறினார்.

இப்படி தி.மு.க.வின் சீனியர் அமைச்சர்கள் ஊழல் செய்ததாக சட்டப்பேரவையிலேயே த.வெ.க. அமைச்சர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில்தான் த.வெ.க. ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் என முடிவு செய்து, தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ரகசிய மீட்டிங் போட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கொங்கு மண்டல ‘மாஜி’ தலைமையில் முன்னாள் அமைச்சர்களின் ‘ரகசிய’ கூட்டம் நடந்திருக்கிறது. இதில் பேசிய கொங்கு மண்டல ‘மாஜி’, ‘‘தவெக அரசு பழைய விவகாரங்களைத் தோண்டித் துருவி நமக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கிவிட்டது. இதற்கு மேலும் நாம் பொறுமை காக்க முடியாது. வரும் தை மாதத்திற்குள் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்பியாக வேண்டும். அதுதான் நமக்கான ‘பொங்கல்’ பண்டிகை. அவர்களின் கட்சியிலேயே யாரும் நிம்மதியாக இல்லை.பல இடங்களில் அதிருப்தியாளர்கள் இருக்கிறார்கள்.
நமது ‘ஸ்லீப்பர் செல்கள்’ தவெக உள்ளேயே தயாராக இருக்கிறார்கள். ‘மாம்பழம்’ மாவட்ட புள்ளியைத் தனியாக நான் கவனித்துக் கொள்கிறேன். எதற்கும் தயங்காமல் சட்டப்பேரவையில் துணிச்சலாக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும்’’ என்று கொந்தளித்துப் பேசியிருக்கிறார்.

தி.மு.க.வில் உள்ள சீனியர் அமைச்சர்களும் கொங்கு மண்டல ‘மாஜி’யின் பேச்சை ஆமோதித்ததோடு, ‘தளபதியும் ஆறு மாதம் பொறுத்திருங்கள் என்றார். தைமாதம் வந்தால் ஆறுமாதமாகிவிடும். இதற்கு மேலும் த.வெ.க.வை விட்டால் நமக்கு ஆபத்து. ‘பா.ஜ.க.வோடு தி.மு.க. மறைமுக உறவில் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே, த.வெ.க. பா.ஜ.க.வுடன் ரகசிய உறவில் இருக்கிறது. இந்த உறவை முறித்தாலே போதும். அதிக எம்.பி.க்களை வைத்திரும் நம்முடைய தயவு பா.ஜ.க.வுக்கு தேவை. எனவே, இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வின் உதவியை நாடினாலும் தப்பில்லை’ என்று பேசியிருக்கின்றனர்.

தி.மு.க. மாஜிக்களின் ரகசிய மீட்டிங் குறித்து அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘திமுகவின் திட்டம் வெறும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தோடு நின்றுவிடவில்லை. தவெக அரசுக்கு போதிய தனிப்பெரும்பான்மை இல்லாத பலவீனத்தை துல்லியமாகக் குறிவைக்கின்றனர். தற்போதைய சூழலில் இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கட்சிகளின் ஆதரவிலேயே விஜய் அரசு சட்டப்பேரவையில் நீடிக்கிறது.

இதில் குறிப்பாக சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ கட்சிகளுக்கும் அரசுக்கும் இடையே நிலவும் விரிசலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த திமுக தீவிரமாக முயல்கிறது. அரசின் முடிவுகளில் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் ஒடுக்கப்படுவதாகவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, இடதுசாரிகளையும் மற்ற கூட்டணிக் கட்சிகளையும் தவெக அரசுக்கான ஆதரவை முழுமையாகத் திரும்பப் பெற வைக்கும் மறைமுக அரசியல் நகர்வுகளை திமுகவின் முடுக்கிவிட்டுள்ளது.

தவிர, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை துணிச்சலுடன் பேரம் பேசும் ஆளும் தரப்பு நம்மீது மட்டும் எப்படி பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு வைப்பதையும் தவிடுபொடியாக்க வேண்டும் என கணக்குப் போட்டு தி-முக காய்நகர்த்துகிறது’’ என்றனர்.

‘கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகவேண்டும்!’ அதுவரை பொறுத்திருப்போம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal