நடிகர் தனுஷை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் அவரது இல்லத்தில் சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கொங்கு மண்டலத்தில் உறுப்பினர் சேர்க்கையையும் தொடங்கியிருக்கிறார்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள்

தனுஷ் விரைவில் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற பேச்சுகள் ஏற்கனவே இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி, குறுகிய காலத்திலேயே ஆட்சியை கைப்பற்றிய சூழலில், அடுத்ததாக தனுஷின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனால் தனுஷின் ஒவ்வொரு அரசியல் தொடர்பான நகர்வும் கவனிக்கப்படுகிறது.

ஏற்கனவே தனுஷின் அரசியல் பயணத்துக்கு பாஜக தரப்பில் ஆதரவு இருக்கலாம் என்ற தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய நிர்வாகி தனுஷை நேரில் சந்தித்ததாக கூறப்படுவது புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம், தனுஷின் எதிர்கால அரசியல் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

எனினும், இந்த சந்திப்பின் உண்மையான பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. தனுஷ் அரசியல் கட்சி தொடங்கினால், அவருக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தரப்பில் ஆதரவு கிடைக்குமா என்பதும் தற்போது முக்கிய கேள்வியாக உள்ளது. தனுஷின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்தான் இதற்கு பதில் அளிக்கும்.

இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கையில் இறங்கியிருக்கிறார்கள் தனுஷ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

இது பற்றி அவர்கள் கூறும்போது, ‘‘கோவையில் சட்டமன்ற தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இனி தமிழகம் முழுவதிலும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறோம்’’ என்றனர்.

அடுத்த ஆண்டுடன் நடிகர் தனுஷ் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. இதனையும் வெகு சிறப்பாக கொண்டாடத் தயாராகி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal